அன்பு நிறைந்த நாட்டை உருவாக்குவோம் – பிள்ளைகளை வெற்றிபெறச் செய்வோம்

பிள்ளைகளுக்கு பாதுகாப்பான, சிறந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் அமைதி, நல்லிணக்கம், நிலைபேறான முன்னேற்றம் அடைந்த ஸ்திரமான நாடொன்றைக் கட்டியெழுப்புவது மிகவும் முக்கியமானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உலக சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில், “உலக சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினம் என்பன ஒரே தினத்தில் கொண்டாடப்படுவது விசேடமானதோர் அம்சமாகும்.

வாழ்க்கைப் பயணத்தின் ஆரம்பத்தினைக் குறித்து நிற்கும் சிறுவர் பருவத்தைப் போன்றே, சமூகத்திற்காக அதிகபட்ச அர்ப்பணிப்புடன் தமது பங்களிப்பை வழங்கி ஓய்வுக் காலத்தைக் கழிக்கும் முதுமைப் பருவமும் கவனஞ் செலுத்தப்பட வேண்டிய இரு வாழ்க்கைப் பருவங்களாகும்.

´அன்பு நிறைந்த நாட்டை உருவாக்குவோம் – பிள்ளைகளை வெற்றிபெறச் செய்வோம்´ என்பதே இம்முறை உலக சிறுவர் தினத்தின் கருப்பொருளாகும்.

இக்கருப்பொருளை எவ்வாறு நடைமுறைச் சாத்தியமானதாக மாற்றுவது என நாம் பொறுப்புடன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அத்துடன் வயதான முதியோர் சமூகத்தினருக்கு அன்பு, பாதுகாப்பை வழங்கி அவர்களது வாழ்க்கை அனுபவங்கள், அறிவு, திறமைகளை மேலும் சமூக முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்திக்கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.

பிள்ளைகளைப் போன்றே முதியோரின் வாழ்க்கை எதிர்பார்ப்புகளும் நிறைவேற வேண்டுமாயின் குடும்பப் பிணைப்புகள் பலமானதாக அமைகின்ற, சிறந்த பொருளாதார சமூகப் பின்புலமொன்றைக் கட்டியெழுப்ப வேண்டிய சவால் நம் முன்னே காணப்படுகிறது.

அந்த சவாலினை வெற்றிகொள்ள அரசாங்கம், வெகுசன ஊடகங்கள், சமய மற்றும் சமூக நிறுவனங்கள், சமூகம் ஆகிய அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக, பொறுப்புடன் செயற்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்” என மேலும் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்