யாழ். காணாமற்போனோருக்கான அலுவலகம் முன்பாக நாளை போராட்டம்!

யாழிலுள்ள காணாமற்போனோருக்கான அலுவலகம் முன்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நாளை செவ்வாய்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் யாழ் மாவட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் கொக்குவிலிலுள்ள காணாமற்போனோர் அலுவலகம் முன்பாக நாளை இலங்கை நேரப்படி காலை 11 மணிக்கு இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது குறித்து இன்று நடாத்திய ஊடக சந்திப்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மேற்படி சங்கத்தின் தலைவி எம்.சுகந்தி இப் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த 2009 இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் பல நூற்றுக்கனக்கான சிறுவர்கள் சரணடைந்ததுடன் பல நூற்றுக்கணக்கான சிறுவர்களை இராணுவத்தினர் கைது செய்தும் இருந்தனர். ஆயினும் அச் சிறுவர்களை இதுவரையில் மீளக் கையளிக்கப்படவில்லை.

இதனால் சரணடைந்த சிறுவர்களுக்கு என்ன நடந்தது அவர்கள் எங்கு இருக்கின்றனர் என்பது தெரியாத நிலையில் அவர்களை விடுவிக்க வேண்டுமென உறவினர்கள் கோரி வருகின்றனர்.

இதற்கமைய சிறுவர் தினத்தை முன்னிட்டு தமது பிள்ளைகளளான சிறுவர்கள் விடயத்தில் அரசாங்கம் பதில் கூற வேண்டுமென வலியுறுத்தியெ இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

எனவே சிறுவர்கள் தினத்தில் சிறுவர்களை மீட்க வேண்டுமென வலியுறுத்தி நடைபெறவிருக்கும் போராட்டத்தில் காணாமற்போனவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட சகல அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள். பொதுமக்கள் பல தரப்புக்களையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor