மைத்திரி மொட்டு சின்னத்துக்கு ஆதரவாக பச்சைக்கொடி!

மொட்டு சின்னத்தை ஆதரிக்க முடியாது என பகிரங்கமாக அறிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

கோட்டாபய ராஜபக்சவை ஆதரிப்பதில் எந்த பிரச்சனையில்லையென்ற போதும், பொதுச்சின்னத்தின் அடிப்படையிலேயே ஆதரவளிக்க முடியுமென்றும் தெரிவித்தார்.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் குருணாகல் மாவட்ட மாநாட்டில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகிப்பது மொட்டினால் அல்ல. சுதந்திரக்கட்சியினாலேயே. அவர் சுதந்திரக்கட்சி உறுப்பினர் என சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் வழங்கிய கடிதத்தின் மூலமே அவர் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகிக்கிறார்.

மொட்டை சேர்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களாக தொடர்வதற்கும் நாமே காரணம். பாராளுமன்றத்தை நான் கலைத்து, அடுத்த நாளே அனைவரும் மொட்டின் உறுப்புரிமையை பெற்று, பாராளுமன்றத்தில் நெருக்கடி ஏற்பட்டது.

இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்த கட்சியென சபாநாயகர் கேட்டார். நாம் கடிதம் வழங்கியே அவர்களை காப்பாற்றினோம்.

நான் இதனை ஏன் கூறினேன்?

மொட்டை சேர்ந்தவர்களும், நாமும் இரண்டு மூன்று மாதங்களாக கூட்டணி அமைப்பது குறித்து கலந்துரையாடினோம். நேற்று காலை மஹிந்த, கோட்டா, பசில் ஆகியோருடன் ஜனாதபதி மாளிகையில் பேசினேன்.

சுதந்திரக்கட்சியின் நிலைப்பாட்டை அவர்களிற்கு கூறினேன். தேசிய வேலைத்திட்ட இணக்கப்பாட்டிற்கமைய கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்க முடியுமென்ற போதும், மொட்டு சின்னத்திற்கு எம்மால் வாக்களிக்க முடியாது என்று கூறினேன். பொதுச்சின்னத்தை உருவாக்குமாறு கூறினேன்.

அவ்வாறு செய்தால் இணைய முடியும்.

நாம் அவர்களிற்கு செய்த உதவி, பாராளுமன்ற உறுப்புரிமையை காப்பாற்றியமை, பிரதமராக்கியமை, எதிர்க்கட்சி தலைவராக்கியமை இவ்வளவற்றையும் நான் ஏன் கூறினேன். இவ்வளவு உதவியையும் நாம் செய்துள்ள நிலையில், கூட்டணி அமைக்கும்போது மொட்டில் நெகிழ்வுத்தன்மை காணப்பட வேண்டும். அந்த நெகிழ்வுத்தன்மை காணப்படாவிட்டால், கட்சியினர் என்ற வகையில் உங்களின் எதிர்காலம் எவ்வாறு அமையும்?

எமது 1,300 பிரதேசசபை உறுப்பினர்களின் எதிர்காலம் என்ன? நாடாளுமன்ற குழுவின் எதிர்காலம் என்ன? கட்சியின் கொள்கையின் எதிர்காலம் என்ன? ஆகவே கட்சியின் எதிர்காலத்தை பாதுகாக்கும் கொள்கை எமக்கு வேண்டும்“ என்றார்.


Recommended For You

About the Author: Editor