கோட்டாபயக்கு எதிராக வழக்கு

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாளர் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்கக் கூடாது என உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காமினி வியாங்கொட மற்றும் சந்திரகுப்த தேனுவர ஆகியோரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (30) இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர், ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர், உள்நாட்டலுவல்கள் அமைச்சர், அமைச்சின் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பதில் பொலிஸ் மா அதிபர், குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் குறித்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்ததாகக் கூறி,  முறையான குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்காமல், இலங்கை கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுள்ளதாக குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள  கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை பயன்பாட்டை,  தடுத்து இடைக்கால தடையுத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறும் குறித்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்