நீராவியடி விவகாரம் பாரிய விளைவை ஏற்படுத்தும்.

நீராவியடி விவகாரத்தில் முறையான விசாரணை இல்லாவிட்டால் சர்வதேச மட்டத்தில் பாரிய விளைவுகள் ஏற்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நீராவியடி விவகாரம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கடிதத்தில், “நீதிமன்ற தீர்ப்பினை மீறியவர்கள் முறையாக கையாளப்படுவதுடன் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

நீதிமன்றத் தீர்ப்பினை அமுல்படுத்துவதற்கு மாறாக குறித்த துறவியின் பூதவுடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்வதற்கு துணையாக இருந்து நீதிமன்ற தீர்ப்பினை நிறைவேற்றத் தவறிய பொலிஸாருக்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்

இந்த விவகாரமானது சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் அமைப்புகளின் இயலாமையை எடுத்துக்காட்டுவதுடன் நீதிமன்ற தீர்ப்பினை மதிக்காத நீதிமன்ற அவமதிப்பு குற்றம் வரை சென்றுள்ளது. இந்த விடயங்கள் விசாரணை செய்யப்பட வேண்டும்

மேலும் அண்மைக் காலங்களில் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டம் நிலை நாட்டப்படாத விதிவிலக்கு கலாசாரம் வலுப்பெற்று வருகின்றமையை நான் சுட்டிக்காட்ட வேண்டும்.

மனிதாபிமான மற்றும் மனித உரிமைகளுக்கெதிராக இழைக்கப்பட்ட பாரதூரமான குற்றங்களிற்கு எதிராக முறையான விசாரணைகளோ முறையான நடவடிக்கைகளோ எடுக்கப்படவில்லை.

நீதிமன்றத்தினை அவமதித்தவருக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. சட்டத்தினை மீறிச் செயற்பட்ட ஒருவருக்கு எவ்வித முறையான விசாரணைகளும் நடத்தாமல் அத்தகைய சட்ட மீறல்களிற்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உயர் நிலை பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய சம்பவம் தொடர்பாக முறையான சுயாதீனமான விசாரணைகள் இடம்பெறாத பட்சத்தில், தொடர்ந்தும் இத்தகைய விதிவிலக்கு கலாசார நிலைமை தொடர்வதனை ஊக்கப்படுத்துவதாக அமையும்.

அதேவேளை நாட்டுக்கும் எல்லா மக்களிற்கும் மிக பாரதூரமான விளைவுகளை உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் ஏற்படுத்தும்.

எனவே சட்ட ஒழுங்கினை நிலைநாட்ட வேண்டிய பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பாக முறையான விசாரணைகள் இடம்பெற்று நீதிமன்றத் தீர்ப்பினை மீறிய நபர்களுக்கு எதிராக முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்”  என்று குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்