11 இளைஞர்கள் கடத்தல் வழக்கு – புதிய அறிக்கை தாக்கல்

2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் புதிய அறிக்கைகளை பதிவு செய்துள்ளது.

அந்தவகையில் கடந்த வியாழக்கிழமை (26) மற்றும் வெள்ளிக்கிழமை (27) கரன்னாகொடவிடம் இருந்து அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு மார்ச் 11, 13, 19 மற்றும் ஏப்ரல் 2 மற்றும் 4 ஆகிய திகதிகளில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவிடம் இருந்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முடிக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 124 வது பிரிவின் படி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் பெறப்பட்ட நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த வாரம் வசந்த கரன்னாகொடவிடம் விசாரிக்கப்பட்டது.

“உடல்நிலை காரணத்தை சுட்டிக்காட்டி, தனது குடும்பத்தில் ஒரு உறுப்பினருக்கு உதவ வேண்டும் என்ற அடிப்படையில் இரண்டு வார கால அவகாசம் கோரியதன் மூலம், கடந்த செப்டம்பர் 20 மற்றும் 21 ஆகிய திகதிகளில் வாக்குமூலம் பதிவு செய்வதை வேண்டுமென்றே கரன்னாகொட தவிர்க்க முயன்றார்” என குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட “பி அறிக்கையில் குற்றம் சாட்டியது.

அத்தோடு செப்டம்பர் 19 ஆம் திகதி அன்று கடற்படை தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கரன்னாகொட கலந்து கொண்டதாக சி.ஐ.டி. நீதிமன்றத்தில் தெரிவித்தது.

எனவே, செப்டம்பர் 24 ஆம் திகதி முதல் மூன்று நாட்களுக்குள் முன்னாள் கடற்படை தளபதியை வரவழைக்கவும், சான்றுகளை திணைக்களத்திற்கு பரிந்துரைக்கவும் சட்டமா அதிபர் அளித்த அறிவுறுத்தலின் படி, நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தபோது,கரன்னாகொடவிடமிருந்து புதிய அறிக்கையை பதிவு செய்ய நீதிமன்ற உத்தரவை சி.ஐ.டி. கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்