கோட்டாக்கு ஆதரவா ? நாளையே முடிவு

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடு நாளை அறிவிக்கப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில் அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நாளை (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது.

இதன்போது ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுஜனவுடனான கூட்டணி ஆகிய விடயங்கள் குறித்த அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாக கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய தேர்தல் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று ஜனாதிபதி தேர்தலில் தனித்து களமிறங்குவதா அல்லது கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிப்பதா என்பது குறித்த இறுதி தீர்மானம் நாளை எட்டப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது.

நேற்று நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமான இந்த கலந்துரையாடல் சுமார் 45 நிமிடங்கள் நீடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டாபய ராஜபக்ஷவுடன் பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்