12 சீனியர் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு.. நிர்மலா சீதாராமன் அதிரடி

வருமான வரித்துறையை சேர்ந்த 12 மூத்த அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்பியுள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று, மீண்டும் பாஜக கூட்டணி, ஆட்சியைப் பிடித்துள்ளது. தொடர்ச்சியாக, இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராகி உள்ளார்.

கடந்த ஆட்சி காலத்தில், மத்திய நிதியமைச்சராக, அருண் ஜெட்லி பதவி வகித்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக அவர் அமைச்சர் பதவியை ஏற்க்க தயங்கியதால், நிதித்துறைக்கு நிர்மலா சீதாராமன் அமைச்சராக்கப்பட்டார்.

கடந்த மோடி ஆட்சி காலத்தில் பாதுகாப்பு துறை அமைச்சராக பதவி வகித்தவர் நிர்மலா சீதாராமன். நிதி அமைச்சராக அவரை நியமனம் செய்தது தொடர்பாக தமிழக நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்தனர்

ஆனால் அவர், பொருளாதாரம் தொடர்பான கல்வியை படித்து உள்ளதோடு, ஏற்கனவே வணிகத் துறை அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர் என்று பாஜக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நிதியமைச்சகத் துறையில் இன்று ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளார் நிர்மலா சீதாராமன்.

வருமானவரித்துறை தலைமை ஆணையர், முதன்மை ஆணையர்கள், மற்றும் ஆணையர்களை என மொத்தம் 12 மூத்த அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அறிவித்துள்ளார் அவர்.

நிதியமைச்சகத்தின் விதி எண் 56இன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோடியின் கடந்த ஆட்சிக்காலத்தில், வருமான வரித்துறை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள், எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில், அத்துறையின் சீனியர் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


Recommended For You

About the Author: Editor