மன்னாரில் மாபெரும் சைவ எழுச்சி மாநாடு!

மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் ‘இந்து மக்களே எழுச்சி கொள்’ எனும் தொனிப்பொருளில் மாபெரும் ‘சைவ எழுச்சி மாநாடு’ மன்னாரில் இடம்பெற்றது.

மன்னார் பிரதான பாலத்தடியில் நடராஜப் பெருமானின் திருவுருவச் சிலையை ஏந்தியவாறு இன்று (சனிக்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்ட எழுச்சிப் பேரணியானது மன்னார் நகர மண்டபத்தை சென்றடைந்தது.

அதனைத் தொடர்ந்து மண்டபத்தில் மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவர் சிவஸ்ரீ மஹா தர்மகுமார குருக்கள் தலைமையில் சைவ மாநாடு ஆரம்பமானது.

இதன்போது மாவட்டத்தில் உள்ள இந்து மக்கள் மத்தியில் விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மாற்று மதத்தின் இடையூறுகள் இன்றியும் மாற்று மத மக்களுக்கு இடையூறு இன்றியும் வாழ்வது தொடர்பாகவும் இந்து நீதி இந்துக்களுக்கு எவ்வாறு முக்கியத்துவம் பெறுகின்றது என்பது தொடர்பாகவும் இம்மாநாட்டில் எடுத்துரைக்கப்பட்டது.

குறித்த எழுச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக சின்மியா மிஸன் சுவாமிகள், தென் கைலை ஆதீனம், செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன், தமிழருவி த.சிவகுமாரன், செந்தமிழ் சொல்லருவி லலீசன், இந்து ஆலய குருக்கள், அதிபர்கள், அறநெறி ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

அதே நேரத்தில் குறித்த நிகழ்வில் ‘இந்து சமயமும் திருக்கேதீஸ்வரத்தின் தொன்மையும்’, ‘பாலாவியின் புனிதம்’, ‘மன்னாரும் இந்து மதமும்’ போன்ற தொனிப்பொருட்களில் விரிவுரைகள் மற்றும் கருத்துரைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: Editor