பேனர் ஜெயகோபால் கைதானது எப்படி?

சட்ட விரோத பேனரால் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் நேற்று (செப்டம்பர் 27) கிருஷ்ணகிரியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

செப்டம்பர் 12 ஆம் தேதி சுபஸ்ரீ உயிரிழந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் கடுமையான அழுத்தங்களை அடுத்து அதுவும் இரண்டு வாரங்களுக்குப் பின் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை பள்ளிக்கரணையில் வைக்கப்பட்ட அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்ல திருமண விழா பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்தது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.

இவ்வழக்கு செப்டம்பர் 25 ஆம் தேதி நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சி சார்பிலும், காவல்துறை சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மாநகராட்சி அறிக்கையில், சம்பந்தப்பட்ட உதவிப் பொறியாளர், செயற் பொறியாளர் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை அறிக்கையில், பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், ஜெயகோபால் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுத் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது அரசுத் தரப்பை நோக்கிய நீதிபதிகள், “முக்கிய குற்றவாளியான ஜெயகோபாலை இன்னும் கைது செய்யாதது ஏன்? சட்ட விரோதமாக அவர் பேனர் வைத்த நிலையில் லாரி ஓட்டுநர் வழக்குடன், அவரது வழக்கைச் சேர்த்தது ஏன்? அவர் இங்கு இருக்கிறாரா? அல்லது வெளிநாடு சென்றுவிட்டாரா? அவர் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?” என்று சரமாரியான கேள்விகள் கேட்டனர்.

இதைத் தொடர்ந்து ஜெயகோபாலை கைது செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட சட்டம் ஒழுங்கு, போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையர்கள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், மொத்த வழக்கையும் அக்டோபர் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

“நாங்களாக இறங்கிவந்து பேனர்களை அகற்றாதுதான் பாக்கி” என்றும் நீதிபதிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இதுபற்றி மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் ஜெயகோபாலை கைது செய்யாதது ஏன்?: நீதிமன்றம் என்ற தலைப்பில் விரிவாக செய்தி பதிவிட்டிருந்தோம்.

ஒட்டுமொத்த வழக்கையும் சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் கண்காணிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே இந்த வழக்கில் போலீஸார் தீவிரம் காட்டத் தொடங்கினர்.

நேற்று (செப்டம்பர் 26) பள்ளிக்கரணை பகுதியில் இருக்கும் ஜெயகோபால் வீட்டுக்குச் சென்று பூட்டியிருந்த வீட்டில், ‘விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் ஒட்டிவிட்டு வந்தனர். இந்த நிலையில் ஜெயகோபாலை தேட திருச்சி, கிருஷ்ணகிரி பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட தனிப்படை போலீஸார் இன்று பகல் தேன்கனிக்கோட்டையில் ஒரு ரிசார்ட்டில் தங்கியிருந்த ஜெயகோபாலை கைது செய்திருக்கிறது என்கிறார்கள் போலீஸார்.

“நீதிமன்றத்தில் பரபரப்பான வழக்குகள் நடந்து தமிழக அரசும் போலீஸாரும் பதில் சொல்ல முடியாமல் விழித்த நிலையிலும் சுபஸ்ரீ மரணத்துக்கு பேனர் காரணமில்லை என்று பேட்டி கொடுத்த ஜெயகோபால் ஒகேனக்கல் சென்று அங்கு தலைமைறைவாக இருந்திருக்கிறார்.

இதெல்லாம் லோக்கல் போலீஸுக்கு தெரிந்தாலும் அரசியல் தலையீடு காரணமாகவே அவரை கைது செய்யாமல் தவிர்த்துவந்தனர். ஜெயகோபாலை விடச் சொல்லி அரசியல் அழுத்தங்கள் அதிகமான நிலையில், அவரைக் கைது செய்யுமாறு அதைவிட அதிகமாக நீதிமன்ற அழுத்தம் ஏற்பட்டது.

இதையடுத்து தேன்கனிக்கோட்டையில் மலையடிவாரத்தில் மல்லிகா ரிசார்ட்டில் தன் குடும்பத்தோடு தங்கியிருந்த ஜெயகோபாலை, தனிப்படை இன்ஸ்பெக்டர் மகேஷ் நேரடியாக சென்று கைது செய்திருக்கிறார்.” என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்


Recommended For You

About the Author: Editor