சவுதி முதன்முறையாக சுற்றுலா விசா வழங்குகிறது!

முதன்முறையாக சுற்றுலா விசா வழங்க தீர்மானித்துள்ளதாக சவுதி அரசாங்கம் அறிவித்துள்ளது.

விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்வுகளில் பங்கேற்க வருபவர்களுக்கு கடந்த ஆண்டு முதல் சவுதி அரசாங்கம் விசா வழங்கி வருகின்றது.

இதைத் தொடர்ந்து தற்போது சுற்றுலா விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைநோக்குப் பார்வை 2030 திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கமைய 49 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இவ்வாறு சுற்றுலா விசா வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என சவுதி அரேபிய சுற்றுலாத்துறை தலைவர் அஹ்மத் அல்-ஹத்தீப் தெரிவித்துள்ளார்.

உடலை முழுமையாக மறைக்கும் வகையில் பர்தா போன்ற ஆடை அணிய வேண்டும் என்ற ஆடைக்கட்டுப்பாடு வெளிநாட்டுப் பெண்களுக்கு தளர்த்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டுப் பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், அவர்களும் கண்ணியமான ஆடை அணிய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவின் மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட 2 வாரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதேவேளை, சவுதி அரேபியாவில் உள்ள ஐந்து இடங்கள் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor