சென்னையில் குடியேறவே விரும்புகிறேன்: தஹில் ரமணி!

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமணி சென்னையில் குடியேறவே விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
மும்பை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய தஹில் ரமணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்றார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் அவரை உச்ச நீதிமன்ற கொலீஜியம் மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்வதாகக் குடியரசுத் தலைவருக்கு தஹில் ரமணி கடிதம் அனுப்பியிருந்தார்.
கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி அவரது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் ஏற்றுக் கொண்டார். மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 27) மெட்ராஸ் பார் அசோசியேஷன் சார்பில் தஹில் ரமணிக்கு பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.
இதில், கலந்து கொண்டு பேசிய அவர், ”பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓராண்டுக்கு மேலாகத் தலைமை நீதிபதியாக பணியாற்றியது பெருமையளிக்கிறது.
மும்பையை ஒப்பிடுகையில் தட்பவெப்ப நிலை, சாலை வசதி, உள்கட்டமைப்பு வசதி என அனைத்திலும் சென்னை சிறந்து விளங்குகிறது. இதனால் எனது கணவருடன் சென்னையில் குடியேற விரும்புவதால், இங்கு நிலம் வாங்கியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், இங்கு பணியாற்றிய ஓராண்டுக் காலத்தில் 5,040 வழக்குகள் முடித்து வைத்ததை நியாயமாகவே கருதுகிறேன்.
 இதற்காக உறுதுணையாக இருந்த நீதிபதி துரைசாமிக்கு நன்றி எனக் கூறியுள்ளார். தனக்கு ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு அளித்த நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் நீதிபதிகள் மணிக்குமார், கிருபாகரன், எம்.எஸ்.ரமேஷ், ஜெயசந்திரன், தண்டபாணி, பாரதிதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor