அக்டோபரில் தமன்னாவின் ‘பெட்ரோமாக்ஸ்’!

தமன்னா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள பெட்ரோமாக்ஸ் திரைப்படம், வரும் அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகிறது.

இந்த ஆண்டு தமன்னா நடிப்பில் கண்ணே கலைமானே, தேவி 2 ஆகிய படங்கள் தமிழில் வெளியாகியுள்ளன. தெலுங்கில் எஃப் 2 – ஃபன் அண்ட் ஃப்ரஸ்ட்ரேஷன், இந்தியில் காமோஷி என்ற படமும் வெளியாகியுள்ளன.

பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பம் காட்டும் தமன்னாவுக்கு பெரும்பாலான கதாநாயகிகள் போலவே ஹாரர் படங்கள்தான் அணிவகுக்கின்றன. இவற்றில் தேவி 2, காமோஷி ஆகிய படங்களும் ஹாரர் ஜானரைச் சார்ந்தவை.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த தேவி 2 ரசிகர்களை திருப்திபடுத்தத் தவறியது. இதனைத் தொடர்ந்து, தமன்னா அடுத்து தேர்ந்தெடுத்துள்ள ஹாரர் படமே பெட்ரோமாக்ஸ்.

ஹாரர் படங்களின் மூலம் அதிக ரசிகர்களை ஈர்க்கலாம், பெரும்பாலும் அவை கதாநாயகியையே மையமிட்டும் வருகின்றன போன்ற காரணங்களால் தமன்னா தொடர்ந்து ஹாரரில் கவனம் செலுத்தி வருகிறார்.

தேவி 2, காமோஷி படங்களின் தோல்வியால், இம்முறை கட்டாய வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தமன்னாவிற்கு, பெட்ரோமாக்ஸ் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே கண்கள் படத்தை இயக்கிய ரோஹித் வெங்கடேசன் இயக்கியுள்ள இப்படம், (செப்டம்பர் 26) யு/ஏ சென்சார் சான்றிதழ் பெற்றிருக்கிறது. அதனைத் தொடர்ந்து, இப்படத்தின் அறிவிப்பை விஜய் சேதுபதி வெளியிட்டிருக்கிறார்.

பெட்ரோமாக்ஸ் அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது படத்தின் புரொமோஷன் பணிகளுக்காக படக்குழு ஆயத்தமாகி வருகின்றது.

பெட்ரோமாக்ஸ் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 27ஆம் தேதி ரிலீசாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது இதன் தேதிகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. தெலுங்கில் வெற்றி பெற்ற அனந்தோ பிரம்மா படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது இப்படம். தாப்ஸி நடித்த பாத்திரத்தில் தமன்னா தமிழில் நடித்திருக்கிறார்.

யோகிபாபு, மன்சூர் அலிகான், முனிஸ்காந்த் ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தை ஈகிள் ஐ புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கிறது.

அக்டோபர் 11 ஆம் தேதி, ஏற்கனவே சுந்தர்.சியின் இருட்டு, சித்தார்த்தின் அருவம் ஆகிய இரண்டு ஹாரர் படங்கள் வெளியாகவுள்ள நிலையில், தமன்னாவின் பெட்ரோமாக்ஸ் கடுமையான போட்டியை சந்திக்கும் எனக் கூறலாம்.


Recommended For You

About the Author: Editor