இ-சிகரெட்டுக்குத் தடை: நீதிமன்றத்தில் வழக்கு!

இ சிகரெட் தடை செய்யப்பட்டதற்கு எதிராகக் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இ-சிகரெட்டுகள் மற்றும் அதுபோன்ற தயாரிப்புகள் மக்களுக்குக் குறிப்பாக இளைஞர்களுக்குச் சுகாதார ஆபத்தை ஏற்படுத்துவதால், அதனைத் தடை செய்ய முடிவு செய்யப்பட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி அறிவித்திருந்தார்.

அதன்படி இ-சிகரெட் உற்பத்தி, இறக்குமதி ஏற்றுமதி, போக்குவரத்து, விற்பனை, விநியோகம், சேமிப்பு மற்றும் விளம்பரம் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை நாட்டில் ஜுல் லேப்ஸ் இன்க் மற்றும் பிலிப் மோரிஸ் இன்டர்நேஷனல் போன்ற இ-சிகரெட் நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களைச் சிதைக்கும் வகையில் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தநிலையில் அரசின் முடிவுக்கு எதிராகக் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இ-சிகரெட் இறக்குமதி நிறுவனங்களான ப்ளூம் வேப்பர் மற்றும் வோக் வேப்பர்ஸ் ஆகியவை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர், “இந்த வழக்குகள் குறித்து அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், வரும் திங்கள் அன்று விசாரணைக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இ.சிகரெட் தடை செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்கள் குறித்து கூடுதல் விவரங்கள் தெரியவரவில்லை என்று சொல்லப்படுகிறது.

சுமார் 1.3 பில்லியன் மக்கள் வசிக்கும் இந்தியாவில் புகையிலை தொடர்பான நோய்களால் ஒவ்வொரு ஆண்டும் 900,000 க்கும் அதிகமானோர் இறக்கின்றனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இ-சிகரெட்டை வேப்பிங் (உள்ளிழுத்து வெளியே விடுதல்) செய்வது நிகோடின் போதைக்கு வழிவகுக்கும் என்றும் பயனர்களைப் புகையிலை நுகர்வுக்குத் தள்ளும் என்றும் அரசு தரப்பில் சொல்லப்படுகிறது.

ஆனால் புகைபிடிப்பதைக் காட்டிலும் வேப்பிங் செய்வது குறைவான தீங்குதான் விளைவிக்கும் என்று இ-சிகரெட் நிறுவனங்கள் சார்பில் கூறப்படுகிறது.

இந்த தடை அரசியலமைப்புச் சட்டத்தின் பல முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது என்று கூறும் ப்ளூம் வேப்பர் நிறுவனம் சார்பில் வாதடவுள்ள மூத்த வழக்கறிஞர் அபிசேக் மனு சிங்வி இந்த முடிவு தன்னிச்சையானது என்று கூறியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor