இங்கிலாந்தில் வாழ அனுமதி கேட்கும் தமிழ் அகதி!

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த முகாம் அமைந்துள்ள மனுஸ்தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழ் அகதியான திரவியராஜா சுப்ரமணியம் இங்கிலாந்தில் வாழ அனுமதிக் கோரியிருக்கிறார்.

இலங்கையில் சித்ரவதையை எதிர்கொண்ட இவர், தற்போது உளரீதியான பாதிப்பை எதிர்கொள்வதாக சொல்லப்படுகின்றது.

இந்த சூழலில், டிசம்பர் 2017ல் இங்கிலாந்தில் குடியேற அவர் அளித்த விண்ணப்பம் கடவுச்சீட்டு இல்லாததால் ஜூன் 2018ல் நிராகரிக்கப்பட்டது. அவர் அகதி என்பதால் கடவுச்சீட்டு இல்லை என்றும் ஆனால் அகதி என அங்கீகரிக்கும் ஐ.நா.வின் பயண ஆவணம் அவரிடம் இருப்பதாகவும் தி கார்டியன் ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில், அவர் இங்கிலாந்தில் வாழ மீண்டும் அனுமதிக்கோரி மேல்முறையீடு செய்துள்ளார்.

தனது சகோதரர் தொடர்பாக நீதிமன்றத்திடம் சுசன்னா சுப்ரமணியம் சமர்பித்துள்ள அறிக்கையில், “எனது சகோதரர் இங்கு வர முடியவில்லை என்றால் அவரது எதிர்க்காலம் என்னவாகும் என அச்சமாக இருக்கிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

2013ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் படகு வழியாக தஞ்சமடைந்த திரவியராஜா சுப்ரமணியம், தற்போது மனுஸ்தீவில் உள்ள இடைத்தங்கல் முகாமில் வைக்கப்பட்டுள்ளார்.

அண்மையில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தேர்தலில் லிபரல் கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பல அகதிகள் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் ஆவணப்படுத்தியிருக்கிறது.

மனுஸ்தீவில் உள்ள திரவியராஜா சுப்ரமணியத்தை சந்தித்து வந்த ஆஸ்திரேலிய சமூக செயல்பாட்டாளர் ரெபீகா லிம், “மனுஸ்தீவில் உள்ள சுகாதார நிலைமை மிகவும் மோசமானதாக இருக்கின்றது.

அவர்களால் மலேரியாவுக்கும் டைபாயிட்க்கும் மருத்துவம் பார்க்க முடியும். ஆனால், சித்ரவதைக்கும் மனச்சிதைவுக்கும் மருத்துவம் பார்க்க முடியாது. தேர்தலுக்கு பின்னர் தற்கொலை மற்றும் தன்னைத்தானே வருத்திக்கொண்ட 40 சம்பவங்கள் நடந்துள்ளன. திரவியராஜா இங்கிலாந்துக்கு செல்ல முடியவில்லை என்றால் அவருக்கு வேறு எந்தவித வழியும் இல்லை,” எனக் கூறியிருக்கிறார்.

“அவர் தனியாளாக இருக்கிறார். திருமணம் தனக்கென ஒரு குடும்பம் அமையும் என நம்பிக்கை கொண்டிருக்கிறார்,” என திரவியராஜா குறித்து ரெபீகா லிம் குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த 2013ம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, படகு வழியாக ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சிப்பவர்களை எந்த பரிசீலனையுமின்றி முழுமையாக நிராகரித்து வருகின்றது.

அதே சமயம், இந்த கொள்கை நடைமுறைக்கு வருவதற்கு முன் தஞ்சமடைந்த நூற்றுக்கணக்கான அகதிகள் இன்றும் பப்பு நியூ கினியா மற்றும் நவுரு உள்ளிட்ட தீவு நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor