நீட் ஆள்மாறாட்டம் : இடைத்தரகர் கைது!

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா வழக்கில் இடைத்தரகராக இருந்த ஜோசப் என்பவரை சிபிசிஐடி போலீசார் கேரளாவில் கைது செய்துள்ளனர்.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர் தனது தந்தையுடன் கைது செய்யப்பட்டு சிபிசிஐடி விசாரணை வளையத்துக்குள் உள்ளார். சிபிசிஐடி போலீஸ் விசாரணையை கையிலெடுத்துள்ள நிலையில் வழக்கில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

உதித் சூர்யா மற்றும் அவரது தந்தைக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மகனை மருத்துவராக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்துவிட்டதாக வெங்கடேசன் வாக்கு மூலம் அளித்துள்ள நிலையில், இந்த மோசடி குறித்து தனது மகனுக்கு தேர்வு எழுதும் முதல் நாள் வரை எதுவும் தெரியாது அனைத்து குற்றத்தையும் தான் மட்டுமே செய்ததாக தெரிவித்திருக்கிறார்.

மேலும் இருவரும் அளித்த வாக்குமூலத்தின் மூலம் உதித் சூர்யாவுக்கு பதிலாக மும்பையில் தேர்வு எழுதிய மாணவரை கேரளாவைச் சேர்ந்த புரோக்கர் ஒருவர் ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. போலியாக ஹால்டிக்கெட் தயாரிக்கப்பட்டு மோசடி செய்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.

மும்பையில் உதித் சூர்யாவுக்குப் பதில் தேர்வு எழுதியவர் மருத்துவ மாணவராக இருக்கலாம் என்று சொல்லப்படும் நிலையில் அவரை தேடும் பணியும் மும்பையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்

இதனிடையே இடைத்தரகராகச் செயல்பட்டவரைக் கைது செய்ய கேரளா விரைந்த போலீசார் அங்கு ஜோசப் என்பவரை கைது செய்திருக்கின்றனர். அவரிடம் நடத்தப்படும் விசாரணையில் உதித் சூர்யாவுக்கு பதில் தேர்வு எழுதிய மாணவர் குறித்த விவரங்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே நீட் ஆள்மாறாட்டத்தில் மேலும் 5 மாணவர்கள் ஈடுபட்டுள்ளதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து இன்றும் தேனி மருத்துவக் கல்லூரியில் விசாரணை தொடங்கியிருக்கிறது. இதில் உதித் சூர்யாவின் வருகை பதிவேட்டில் திருத்தம் செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடியிடம் சிக்கியிருக்கிறது.

இதனால் மருத்துவக் கல்லூரிக்கு நெருக்கடி அதிகரித்திருக்கிறது. தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளிடம் விரிவான விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor