சிங்களவர்களுடன் தமிழர்கள் இணைந்து வாழ முடியாது – வைகோ!

சிங்களவர்களுடன் தமிழ் மக்கள் ஒருபோதும் இணைந்து வாழ முடியாது என்பதற்கு முல்லைத் தீவு மாவட்டத்தில் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நடந்த கொடூர நிகழ்வே சான்றாகும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டமைக்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அரசின் உதவியோடு பௌத்த பிக்குகள் நடத்தி இருக்கும் இத்தகைய அக்கிரமங்களைப் பன்னாட்டு சமூகம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

தமிழர்களைக் கொன்று குவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இராணுவ அதிகாரிகள் மீது இனப்படுகொலை வழக்கு பதிவு செய்து, பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்காமல் இருப்பதால்தான், இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இத்தகையப் பண்பாட்டு அழிப்பு நடவடிக்கைகள் மேலோங்கி வருகின்றன.

இலங்கை என்பது இருவேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடு. தமிழ் ஈழத்தில் இலட்சக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு, பத்து ஆண்டுகள் முடிந்துவிட்டன.

இலங்கை அரசால் கொன்று குவிக்கப்பட்ட தமிழர்கள் போக, எஞ்சி உள்ள தமிழர்களை, கட்டமைக்கப்பட்ட பண்பாட்டுத் தாக்குதல்கள் மூலம் அழித்து ஒழிப்பதில் இலங்கை அரசும், பௌத்த மதவாதக் கும்பலும் கரம் கோத்துக்கொண்டு செயல்படுகின்றன.

தமிழ் ஈழம் அமைப்பதற்கு ஈழத்தமிழர்களிடமும், உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்த ஐநா சபையும், பன்னாட்டுச் சமூகமும் இனியாவது முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்,’ என வைகோ வலியுறுத்தியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor