தற்கொலைதாரியின் உடல்பாகங்கள் புதைக்பட்டன

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதியான மொஹமட் ஆசாத்தின் உடற்பாகங்கள் புதிய காத்தான்குடி பெரிய ஜூம்மா பள்ளிவாசல் மையவாடியில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் புதைக்கப்பட்டது.

குறித்த உடற்பாகங்களை, காத்தான்குடி பிரதேச செயலாளர் மற்றும் கிராம உத்தியோகத்தர் பொறுப்பேற்று இன்று (வெள்ளிக்கிழமை) பள்ளிவாசல் மையவாடியில் புதைக்கப்பட்டது.

காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த தற்கொலைக் குண்டுதாரியின் தலை மற்றும் உடற்பாகங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த உடற்பாகங்களை அரச செலவில் புதைக்குமாறு அரசாங்க அதிபருக்கு நீதிமன்றம் கட்டளையிட்டது.

இதனையடுத்து மட்டக்களப்பு புதூர் ஆலையடி மயானத்தில் குறித்த உடற்பாகங்களை புதைப்பதற்கு முயற்சித்தபோது அங்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனையடுத்து பல்வேறு இடங்களில் உடற்பாகங்களை புதைக்க முற்பட்டபோதும் அந்தந்த பிரதேச மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததுடன் சில உள்ளுராட்சி மன்றங்கள், மாநகரசபைகள் இதனை தமது பிரதேசத்தில் புதைப்பதற்கு எதிராக தீர்மானம் எடுத்திருந்தனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் இரவோடு இரவாக இந்த உடற்பாகங்கள் புதைக்கப்பட்டன. இதனையடுத்து பொதுமக்கள், அரசில் வாதிகள் இதற்கு எதிராக வீதியில் இறங்கி போராடினர்.

இதனால் கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட உடற்பாகங்களை நீதிமன்ற உத்தரவுக்கமைய மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்ட நிலையில் இதனை பொருத்தமான இடத்தில் அரசாங்க அதிபர் ஊடாக புதைக்குதாறு நீதவான் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு கட்டளையிட்டார்.

இதற்கமைய குறித்த உடற்பாகங்கள் இன்று புதைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்