கோயில்கள் என்ன பிணச்சாலையா – காணாமல்போனோர் உறவுகள்!!

பிக்குவின் உடலை தகனம் செய்வதற்கு இந்துக்கோயில் என்ன சவக்காலையா? என வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கபட்டோர் உறவுகளின் சங்கத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வவுனியா ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இதனை தெரிவித்திருந்தனர்.

மேலும்,

அரச மரம் இருக்கின்ற இடமெல்லாம் புத்தர் சிலையை அமைத்து விட்டு பிக்குகள் அதனை தமது இடம் என்று சொல்கிறார்கள் என்றும், இதேபோல் நாமும் தெற்கிற்கு சென்று ஒரு இந்து கோவிலை அமைத்து விட்டு எமது பூர்விக இடமென்றால் அதனை அரசாங்கமோ, பௌத்தர்களோ ஏற்று கொள்வார்களா? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்வதற்கு இந்துக்கோயிலில் தகனம் செய்யலாம் என்றால் இலங்கை ஓர் பௌத்த நாடா எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் நீதி என்பது நாட்டில் வாழும் அனைவருக்கும் சமனானது என்றும் ஆனால் இங்கு சட்டவாளருக்கே தாக்குதல் மேற்கொள்ளப்படும் அவல நிலை உருவாக்கபட்டிருக்கிறதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே தமிழர் பிரதேசத்தில் சட்டத்தையும், நீதித்துறையையும் அவமதித்த தேரர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளானர்.

அத்துடன் தமிழர்களாகிய நாம் ஒன்று பட்டு எமக்கான உரிமையை வென்றெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை நாட்டில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவிருக்கின்ற நிலையில் எம்மை பொறுத்தவரை புதிதாக எந்த ஒரு ஜனாபதி வந்தாலும் காணாமல் ஆக்கபட்டவர்கள் இல்லை என்றே பதில் கூறுவார்கள் என்றும், எனவே நாம் யாரையும் ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இல்லை எனவும் கூறிய அவர்கள், எனினும் எமது பிள்ளைகளின் நிலையை அறியும் வரை நாம் தொடர்ந்து போராடி கொண்டேயிருப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

அந்தவகையில் எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி சர்வதேச சிறுவர்தினம் அனுஸ்டிக்கபடவுள்ள நிலையில், அன்றையநாள் வடகிழக்கின் 8 மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்வதற்கு நாம் தீர்மானித்துள்ளதாகவும் அவர்கள் இதன்போது மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த போராட்டம் வவுனியாவில் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக காலை 9 மணிக்கு இடம்பெறும்.எமது போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவை நல்க வேண்டும் என்று தெரிவித்தனர்.


Recommended For You

About the Author: Editor