கூட்டா …தனியா … 30இல் மைத்திரியின் முடிவு!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்ப்பில் வேட்பாளரை நிறுத்தி தனிவழியில் செல்வதா?

அல்லது பெரமுனவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு ஒன்றிணைந்து செயற்படுவதா? என்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, எதிர்வரும் 30 ஆம் திகதி திங்கட்கிழமை தீர்மானிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் , கட்சியின் மத்தியக் குழு, கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், அன்றுமாலை கூடவுள்ளது.

எப்படியாக இருந்தாலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனி வழியில் செல்வதற்கான ஆதரவு அதிகரித்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டுசேர்ந்து பயணிப்பதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க ,ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடுவதா அல்லது தனியாக போட்டியிடுவதா என்பது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் கட்சி மத்திய குழு கூட்டத்தில் தீர்க்கமான முடிவு எட்டப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ​போட்டியிடாவிட்டால் யாரை களமிறக்குவது என இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்றும், அடுத்த வாரத்தில் முக்கிய பலசுற்று பேச்சுக்கள் கட்சிக்குள் நடைபெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் பொது ஜன பெரமுனவுடன் எந்த அடிப்படையில் சு.க இணைய வேண்டும் என்பது தொடர்பில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை எனக்கூறிய அவர், மொட்டு சின்னத்திற்கு பதிலாக பொதுச் சின்னமொன்றில் போட்டியவேண்டும் என்றே எமது அமைப்பாளர்கள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கோரி வருகின்றதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor