இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – 20 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் உணரப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது.

இந்தோனேசியாவில் நேற்று(வெள்ளிக்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் உணரப்பட்டன.

உள்ளூர் நேரப்படி காலை 5.16 மணியளவில் சீரம் பகுதியில் 6.5 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

எனினும் இதன்போது சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

அதனைத் தொடர்ந்து உள்ளூர் நேரப்படி காலை 6.46 மணியளவில் கிழக்கு பகுதியில் உள்ள மலுகு மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அம்பான் தீவின் வடகிழக்கே சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் கடலுக்கடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

இதை தொடர்ந்து மீண்டும் காலை 7.39 மணியளவில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து வீடுகளை விட்டு வெளியேறியினர்.

இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

12 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்