அரச துறையினருக்கு ஜனவரி முதல் சம்பள அதிகரிப்பு

அனைத்து அரசாங்க ஊழியர்களின் மாதாந்த சம்பளம் 2020 ஜனவரி முதல் 3,000 ரூபா முதல் 24,000 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது. அரச சேவையில் அனைத்து ஊழியர்களதும் சம்பளம் அதிகரிக்கப்படுவதுடன் குறிப்பாக ரயில்வே மற்றும் தபால் துறை ஊழியர்களினது சம்பள முரண்பாடும் நீக்கப்படவுள்ளது.

ரயில்வே துறையின் சம்பள அதிகரிப்புக்கிணங்க ரயில்வே தொழில்நுட்ப சேவை உத்தியோகத்தர்கள், கண்காணிப்பு முகாமைத்துவ சேவை அதிகாரிகளுக்காக புதிய சம்பள முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான ஆரம்ப சம்பளம் 36,095 ரூபாவாகவும் ரயில்வே சாரதி உதவியாளர்களது ஆரம்ப சம்பளம் 34,415 ரூபாவாகவும் அமையும்.

எனவே ரயில்வே துறையில் சம்பள முரண்பாட்டை நீக்குமாறு மேற்கொள்ளப்படும் தொழிற்சங்க போராட்டத்திற்கு இனி அவசியமிருக்காது. அரசாங்க ஊழியர்களின் இந்த சம்பள அதிகரிப்பின் கீழ் 2015 ஆம் ஆண்டு 11,730 ரூபாவாகவிருந்த அரச ஊழியர்களின் ஆரம்ப மட்ட சம்பளம் 2020 ஆம் ஆண்டு 24, 250 ரூபாவாக அதிகரிக்கும். அதற்கான அங்கீகாரம் தற்போது பெறப்பட்டுள்ளது.

புதிய சம்பள அதிகரிப்பானது விசேட சம்பள ஆணைக்குழுவின் சிபார்சுக்கிணங்க 3,000 ரூபாவால் அதிகரிப்பதுடன் அது 27,250 ரூபாவாக இருக்கும். இந்த சம்பள அதிகரிப்பினால் நாட்டின் சுமார் 11 இலட்சம் அரசாங்க ஊழியர்கள் பயனடையவுள்ளனர். அவர்களது மேலதிக நேர கொடுப்பனவு இதன்மூலம் அதிகரிக்கும்.

இச் சம்பள அதிகரிப்பு அடிப்படைச் சம்பளத்துடன் சேர்க்கப்படும். இதன் மூலம் அனர்த்தங்களுக்கான கடன், வீடமைப்பு கடன் உள்ளிட்ட கடன்களின் தொகையும் அதிகரிக்கும்.

2015 ஆம் ஆண்டு அரசாங்க ஊழியர்களின் சம்பளத்துக்காக 562 பில்லியன் அரசாங்கம் ஒதுக்கியது. அது தற்போது 750 பில்லியனாக அதிகரித்துள்ளது. அதேபோன்று 2015 ஆம் ஆண்டு ஓய்வூதிய கொடுப்பனவுக்காக அரசாங்கம் 157 பில்லியன் ரூபாவை ஒதுக்கியது. தற்போது அது 225 பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது 2015 ஆம் ஆண்டு இருந்த சம்பளத்தோடு ஒப்பிடுகையில் 107 வீதத்தால் அதிகரிக்கப்படுவதுடன் 2020 ஜனவரியில் இது அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்