அயோத்தி வழக்கு: அக்.18-க்குள் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் அனைத்து தரப்பும் தங்களது வாதங்களை அக்டோபர் 18-ந் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ராம் லல்லா, நிர்மோகி அகாடா மற்றும் சன்னி வக்ஃபு வாரியம் ஆகியவை சமமாக பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று 2010-ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து வருகிறது.

முன்னதாக இப்பிரச்சனைக்கு தீர்வு காண 3 பேர் கொண்ட மத்தியஸ்த குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்திருந்தது. ஆனால் மத்தியஸ்த குழுவால் பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை.

இதையடுத்து கடந்த மாதம் 6-ந் தேதி முதல் நாள்தோறும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இன்று 32-வது நாளாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

இன்றைய விசாரணையின் போது, அக்டோபர் 18-ந் தேதிக்குள் அனைத்து தரப்புகளும் தங்களது வாதங்களை நிறைவு செய்ய வேண்டும்; அதற்கு பின்னர் எந்த தரப்புக்கும் அனுமதி அளிக்கப்படாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவிட்டிருக்கிறது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor