வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டமையைக் கண்டித்து வவுனியாவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டம் சுயாதீன இளைஞர்களின் ஏற்பாட்டில் இன்று (வியாழக்கிழமை) காலை வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்தில் முல்லைத்தீவு நீதிமன்றின் கட்டளையை அவமதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நீதிதுறையை அவமதித்த தேரர்களை கைது செய்யகோரியும் இந்து ஆலயங்களின் புனித தன்மையை பாதுகாக்குமாறு தெரிவித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘இது ஜனநாயாக ஆட்சியா’, ‘பௌத்த பேரினவாத பிக்கு ஆட்சியா’, ‘காவி உடையில் காடையர்களா’, ‘மதப் பிரச்சினையை தூண்டாதே’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இதன்போது பௌத்த தேரர்களின் உருவப்படம் அடங்கிய பதாதைகளும் தீயிட்டு எரிக்கப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி,சிவமோகன், சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், முன்னாள் மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம், உள்ளூராட்சி சபை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளை சார்ந்தோர், பொது அமைப்பினர், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.


Recommended For You

About the Author: Editor