மழையுடனான வானிலை தொடரலாம்!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

காலநிலை அவதான நிலையத்தினால் இன்று(வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானிலையானது மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாதகமான நிலையாக உருவாகி வருகின்றது.

மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்கொந்தளிப்பாகவும்காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor