டொனால்ட் ட்ரம்ப்பை பதவி நீக்க அதிரடி தீர்மானம்..

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சியினர், அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது முறையான குற்றச்சாட்டு விசாரணையை நேற்று தொடங்கியுள்ளனர்.

இது ஏன் உலகம் முழுக்க உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. இதோ இதுதான் விஷயம்: 2014 ஆம் ஆண்டில், அப்போதைய துணை அதிபர் ஜோ பிடன், உக்ரைனில் தத்தளித்த அரசை காப்பாற்றும் அமெரிக்க ராஜதந்திர முயற்சிகளில் முன்னணியில் இருந்தார்.

ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தடுக்கவும் ஊழலை வேரறுக்கவும் அமெரிக்க தலையீடு உதவும் என்று சொல்லி ஒற்றைக்காலில் நின்றார்.

அடிக்கடி சிறப்பு விமானத்தில் உக்ரைன் சென்றுவந்தார். ஆனால், திடீரென, ஜோ பிடன் மகன், ஹண்டர், ஒரு உக்ரேனிய எரிவாயு நிறுவனத்தில் பதவியில் அமர்ந்தபோது, அனைவரது புருவங்களும் மொத்தமாக உயர்ந்தன.

ஜோ பிடனின் உக்ரைன் மீதான அக்கறைக்கும், அவரது மகன் அங்கே பலன் பெற்றதற்கும் தொடர்பு இருப்பதாக முனுமுனுப்புகள் எழுந்தன. அப்போது அதிபராக இருந்தவர் பராக் ஒபாமா. அவர் தனது சகாவை விட்டுத்தர தயாராக இல்லை.

ஹண்டருக்கும் அவரது தந்தைக்கும் முடிச்சு போட முடியாது. ஹண்டர், ஒரு தனியார் குடிமகன். பிடன் தவறு செய்ததாக கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றது வெள்ளை மாளிகை. ட்ரம்ப் பற்றி பேச்சை ஆரம்பித்துவிட்டு, எதற்கு ஜோ பிடன் கதையை சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.

வெயிட் ப்ளீஸ். தொடர்ந்து படியுங்களேன். இத்தனை வருடங்கள் கழித்து, இந்த விவகாரம் இப்போது மீண்டும் லைம்லைட்டுக்கு வந்துள்ளது. இதற்கு காரணம், ஜோ பிடன் “ஊழலில் ஈடுபட்டது பற்றி விசாரிக்க உதவுங்கள்” என உக்ரைன் அதிபரை தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கேட்டுக் கொண்டதுதான்.

ஜோ பிடன் மீதான குற்றச்சாட்டை ட்ரம்ப் எதற்கு இப்போது தோண்டியெடுக்க வேண்டும்? ஏனெனில், அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக களமிறங்கப்போகும், டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக ஜனநாயக கட்சி சார்பில் கோதாவில் குதிக்க அதிக வாய்ப்புள்ளவர், இதே ஜோ பிடன்தான்.

ஹண்டர் தொழில் தொடர்புகளுக்கும் அவர் தந்தை ஜோ பிடனுக்கும் தொடர்பு இருக்கலாமா என்ற சந்தேகம் எப்படி ஏற்படுகிறது? இதுதான் காரணம்: ஹண்டர் 2014, ஏப்ரலில், புரிஸ்மா ஹோல்டிங்ஸின் கட்டண வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

அந்த நிறுவனத்தின் நிறுவனர் உக்ரைனின் ரஷ்ய நட்பு அதிபரான, விக்டர் யானுகோவிச்சின் அரசியல் நண்பராக இருந்தவர். 2014 பிப்ரவரியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களால், விக்டர் பதவியிலிருந்து துரத்திவிடப்பட்டார்.

யானுகோவிச்சின் பதவி நீக்கத்தை தொடர்ந்து, ஒபாமா நிர்வாகம் உக்ரைனின் புதிய அரசுடன், உறவுகளை தீவிரப்படுத்தியது. ஜோ பிடன் இதில் முக்கிய பாத்திரத்தை வகித்தார். அப்போதுதான், புரிஸ்மா ஹோல்டிங்ஸ் நிறுவனம், ஒபாமா அரசின் ஆதரவை பெற முற்பட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

அந்த நேரத்தில், இந்த நிறுவனம் ரஷ்யாவால் இணைக்கப்பட்ட உக்ரேனிய தீபகற்பமான கிரிமியாவில் இயற்கை எரிவாயு பிரித்தெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், புரிஸ்மா ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு உதவ தனது தந்தையை பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து ஹண்டர் மறுத்துவருகிறார்.

இருப்பினும், இந்த விவகாரம் டிரம்ப் மற்றும் அவரது கட்சியினரால் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. புரிஸ்மா நிறுவன, உரிமையாளர் மீது விசாரணை நடத்திவந்த விக்டர் ஷோகினை பதவி நீக்கம் செய்ய உக்ரைன் அரசிற்கு, 2016ல், ஜோ பிடன், அழுத்தம் கொடுத்ததை அவர்கள் குறிப்பாக சுட்டிக்காட்டி வருகிறார்கள்.

சரி இதற்கும், ட்ரம்ப் மீது பதவிநீக்க தீர்மானம் கொண்டுவருவதற்கும் என்ன சம்மந்தம்? இதுதான் விஷயம்: “ஜோ பிடனின் மகனைப் பற்றி நிறைய சர்ச்சைகள் உள்ளன, புரிஸ்மா நிறுவனத்தின் மீதான விசாரணையை, பிடன் நிறுத்திவிட்டார், அதன் பின்னணி பற்றி நிறைய பேர் அறிய விரும்புகிறார்கள். எனவே விசாரணை நடத்துங்கள்” என்று டிரம்ப் கடந்த ஜூலை 25ம் தேதி போனில், உக்ரைன் வோலோடிமைர் ஜெலென்ஸ்கியிடம் கூறியுள்ளார்.

ஜனநாயக கட்சியின் தலைவரும், முன்னாள் துணை அதிபருமான ஒருவருக்கு எதிராக விசாரணை நடத்த பிற நாட்டு உதவியை நாடினார் ட்ரம்ப் என்பதுதான் ஜனநாயக கட்சியின் குற்றச்சாட்டு. எனவேதான், அவரை பதவியிலிருந்து நீக்கும் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. உக்ரைனுடனான தொடர்புகள் தொடர்பாக டொனால்ட் டிரம்ப் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டுமா என்பது குறித்து விசாரணை நடத்த ஜனநாயகக் கட்சி திட்டமிட்டுள்ளது.

தகுதி நீக்கம் நடவடிக்கை எப்படி நடைபெறும்?: அமெரிக்க அரசியல் சாசனம், அதிபரின் தகுதி நீக்கம் தொடர்பாக இப்படி வரையறுத்துள்ளது “லஞ்சம், ஊழல், தேசத்துரோகம், பெரிய குற்றச் செயல் அல்லது தவறான நடவடிக்கைகள் ஆகியவற்றில் அதிபர் ஈடுபட்டதாக தெரிந்தால், அவருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானத்தை கொண்டுவரலாம்” இவ்வாறு அரசியல் சாசனம் தெளிவாக வரையறுத்துள்ளது.

பிரதிநிதிகள் சபையின் எந்த ஒரு உறுப்பினர் வேண்டுமானாலும் அதிபர் மீது மேற்கண்ட குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக தெரியவந்தால் தகுதிநீக்க தீர்மானத்தை முன்மொழியலாம். இந்த தீர்மானத்திற்கு குறைந்தபட்ச ஆதரவு, அதாவது 51 சதவீதம் உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால் அந்த பிரச்சினை விசாரணைக்கு உட்படுத்தப்படும்.

இதன் பிறகு செனட் சபையில் விசாரணை ஆரம்பம் ஆகும். இந்த விசாரணையை அமெரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மேற்பார்வையிடுவார். பிரதிநிதிகள் சபை சார்பில் வாதிடுவதற்கு ஒரு குழு அமைக்கப்படும். செனட்டர்கள் நீதிபதி ஸ்தானத்தில் இருப்பார்கள். அதிபர் தனக்காக வாதிடுவதற்கு வழக்கறிஞர்களை நியமிக்கலாம்.

விசாரணையின் முடிவில் செனட் சபையில் வாக்கெடுப்பு நடைபெறும். மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு.. அதாவது 67% செனட்சபை உறுப்பினர்களாவது, அதிபர் மீது தவறு இருப்பதாக வாக்களித்தால் அதிபர் அவரது பதவியிலிருந்து நீக்கப்படுவார். அப்படி நடந்தால் அதன்பிறகு, துணை அதிபர், அதிபருக்கான பொறுப்பு வகிப்பார்.

ஆனால் அமெரிக்க வரலாற்றில் இதுவரை எந்த ஒரு அதிபரும் தகுதிநீக்க அஸ்திரம் மூலமாக தகுதி நீக்கப்பட்டதாக, வரலாறு இல்லை. இந்த அஸ்திரம் எடுக்கப்படும் என பலமுறை எதிர்க்கட்சிகளால் மிரட்டலுக்கு உட்படுத்தப்பட்டாலும் அமெரிக்க வரலாற்றில் இதுவரை இரு அதிபர்கள் தான் தகுதிநீக்க தீர்மானத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அமெரிக்காவின் 42வது அதிபர் பில் கிளின்டன் லேட்டஸ்ட்டாக, இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர். மோனிகா லெவின்ஸ்கி என்ற பெண்ணுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு இருந்ததாக எழுந்த, குற்றச்சாட்டு தொடர்பாக எந்த தகுதிநீக்க அஸ்திரம் எடுக்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டு செனட் சபையில் விசாரணை நடந்தது.

ஆனால் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவை பெற முடியவில்லை. இதனால் கிளிண்டன் பதவியிலிருந்து தப்பினார். இதற்கு முன்பாக 1868ஆம் ஆண்டு அமெரிக்காவின் 17வது அதிபர் ஆண்ட்ரியு ஜான்சனுக்கு எதிராக தகுதி நீக்க தீர்மானம் முன்மொழியப்பட்டது.

அதுவும் தோல்வியில் தான் முடிந்தது. அப்படியானால் டோனால்ட் டிரம்ப்புக்கு, எதிரான தகுதிநீக்க அஸ்திரம் பலிக்குமா, பலிக்காதா என்ற கேள்வி எழக்கூடும். செனட் சபையில் டொனால்ட் ட்ரம்ப்பின், குடியரசு கட்சி தான் அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

அவரது கட்சி உறுப்பினர்களே அவருக்கு எதிராக வாக்களித்தால் மட்டும்தான் அவரைப் பதவியிலிருந்து நீக்கும் வாய்ப்பு உருவாகும். ஆனால் பெரும்பான்மையான அவரது கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர்கள் ட்ரம்பு மீது நம்பிக்கை உடையவர்களாக உள்ளனர்.

எனவே பதவி நீக்க தீர்மானம் தோல்வியில்தான் முடியும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.


Recommended For You

About the Author: Editor