தமிழினத்திற்கு விடுக்கப்பட்ட சவாலே நீராவியடி விவகாரம் – சிறிகாந்தா!

கடந்த திங்கட்கிழமை முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் கோவில் முன்பு, திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட பௌத்த சிங்கள அதிகார சதிராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகளும், அவர்களுடன் தோளோடு தோள் நின்று செயற்பட்ட கனவான்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் ஏகோபித்த கோரிக்கையாக இன்று உள்ளது.

இந்த விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படுவதற்கு ஏதுவாக, சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் வடமாகாண சட்டத்தரணிகள் களமிறங்கியுள்ளனர்.

வரும் வெள்ளிக்கிழமை வரையில் சட்டத்தரணிகளின் நீதிமன்ற பகிஸ்கரிப்புப் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலம் கடத்தாமல் சட்டத்தை நிலைநாட்டி பிரச்சினையை சுமுகமாக தீர்த்து வைக்க அரசாங்கம் தவறுமேயானால் அடுத்தது என்ன என்ற கேள்வி உடனடியாகவே எழத்தான் செய்யும்.

இந்த விவகாரம் கால இழுத்தடிப்பினால் நீர்த்துப்போக எவ்விதத்திலும் அனுமதிக்கக் கூடாது. தேவைப்படும் நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க தவறினால் பரந்த அளவிலான மக்கள் போராட்டம் ஒன்றுக்கான அறைகூவலை விடுப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

குறுகிய கட்சி அரசியல் நலன்களையும், வேறுபாடுகளையும் புறந்தள்ளி தமிழ்த் தேசியம் சார்ந்த சகல அரசியல் கட்சிகளையும் இந்த செயற்திட்டத்தில் ஒருங்கிணைத்து வெற்றிகரமாக அதனை முன்னெடுக்க முடியும் என்றே நம்புகின்றோம்.

பண்டாரவன்னியன் ஆண்ட மண்ணில் வைத்து சண்டாள சேனை ஒன்றினால் தமிழினத்தின் சுய மரியாதைக்கு விடுக்கப்பட்டிருக்கும் இனவெறிச் சவாலை, சாத்தியமான சகல வழிகளிலும் நாம் அனைவரும் சந்தித்தே ஆக வேண்டும்.


Recommended For You

About the Author: Editor