புர்கா அணிய விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தும் நீடிப்பு!

ஊவா மாகாணத்தில் ‘புர்கா’ அணிய விதிக்கப்பட்ட தடையை தொடர்ந்தும் பின்பற்றுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஊவா மாகாண ஆளுனர் மைத்திரி குணரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘புர்கா’ உடையை ஊவா மாகாணத்தில் தடைசெய்வதன் ஊடாக நான் முஸ்லீம் மக்களுக்கு எதிரானவன் அல்ல.

மாகாணத்தின் பாதுகாப்பினை முன்னிலைப்படுத்திய வகையிலேயே ‘புர்கா’ தடையை மேற்கொண்டிருக்கின்றேன். கடந்த காலத்தில் சங்கைக்குரிய ஞானசார தேரரின் முஸ்லீம்களுக்கெதிரான செயற்பாடொன்றிலும் நான் தேரரை எதிர்த்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தேன்.

என்னிடம் இத்தகைய இன, மத, கட்சிப் பேதங்களும் கிடையாது. தேசிய பாதுகாப்பினை உறுதிபடுத்தும் வகையிலேயே, இச் செயற்பாட்டினை, ஊவா மாகாணத்தில் மேற்கொள்ளும்படி மாகாண பிரதி பொலிஸ் அதிபரைக் கேட்டுள்ளேன்.

‘புர்கா’ உடையைப் பயன்படுத்தி, அடிப்படைவாதிகள் எவராயினும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு விடலாம். இதன் மூலம் அனைத்து முஸ்லீம்கள் மீதும் குற்றஞ் சுமத்திவிட முடியாது.

இந்நாட்டு முஸ்லீம் மக்கள், சிங்கள மக்களுடனும், தமிழ் மக்களுடனும் ஒன்றிணைந்து வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய சகவாழ்வினை ஜீரணிக்க முடியாத சிலர் தப்பான செயற்பாடுகளில் இறங்கி விடலாம். இதனைத் தடுத்து, முன்மாதிரி மாகாணமாக, ஊவா மாகாணத்தை மாற்றியமைக்கவே, எனது செயற்பாடுகள் அமைகின்றன.

ஊவா மாகாணத்தில் ‘புர்கா’ அணிந்து செல்வார்களாயின், அவர்களை விசாரணைக்குற்படுத்த வேண்டியது பொலிசாரின் கடமையாகும். எனது இச் செயற்பாடுகள் முஸ்லீம் மக்களை அசௌகரியப்படுத்துமானால் அது குறித்து கவலையடைகின்றேன்.

நாட்டின் அண்மையில் ஏற்பட்ட முஸ்லீம் அடிப்படைவாதிகளின் பிரச்சினையினையடுத்து சட்டம் கொண்டு வரப்பட்டு ‘புர்கா’ அணிய தடை பிறப்பிக்கப்பட்டது.

அச்சட்டம் தற்போதைய நிலையில் நீக்கப்பட்டதுடன், ‘புர்கா’ தடையும் நீக்கப்பட்டதென்று அறிவிப்பு விடுத்தாலும் ஊவா மாகாணத்தில் அத்தடையை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 250 இற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இலங்கையில் அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், நிகாப், புர்கா மற்றும் முகத்தினை மறைக்கும் தலைக்கவசம் ஆகியவற்றை அணியவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும், நிகாப், புர்கா மற்றும் முகத்தினை மறைக்கும் தலைக்கவசம் ஆகியவற்றை அணிய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவினால் அண்மையில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளமை காரணமாகவே குறித்த தடையும் நீக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor