சவுதி இளவரசருக்காக தனி விமானத்தில் பயணித்த இம்ரான்கான்!

பாகிஸ்தானில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் இம்ரான்கான் பலவிதமான சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.

இதனால் அவர் வெளிநாட்டு பயணங்களுக்காக பொது மக்கள் பயணிக்கும் சாதாரண பொது விமான சேவைகளையே பயன்படுத்தி வருகின்றார்.

இந்த நிலையில் இரண்டு நாட்கள் சுற்று பயணமாக பிரதமர் இம்ரான்கான் சவுதி அரேபியாவுக்கு சென்றிருந்தார். அவருடன் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ‌ஷா மெஹ்மூத் குரே‌ஷி, நிதி ஆலோசகர் ஹபிஸ் ‌ஷாயிக் உட்பட உயர்மட்ட அதிகாரிகளும் சென்றிருந்தார்கள்.

பிரதமர் இம்ரான்கான், சவுதியின் பட்டத்து இளவரசர் மொஹம்மட் பின் சல்மானை நேரில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

அதனை தொடர்ந்து அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுசபை அமர்வில் கலந்து கொள்வதற்காக சவுதி அரேபியாவில் இருந்து அமெரிக்கா செல்வதற்கு இம்ரான்கான் தயாராகினார்.

வழக்கம் போன்று அவர் பயணிகள் விமானத்தில் அமெரிக்கா செல்ல ஆயத்தமான நிலையில், அவரை தடுத்து நிறுத்திய பட்டத்து இளவரசர் சல்மான், ‘‘எங்கள் நாட்டு விருந்தாளி பயணிகள் விமானத்தில் செல்வதை அனுமதிக்க முடியாது.

எனவே நீங்கள் என்னுடைய தனி விமானத்தில் அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்லுங்கள்’’ என பிரதமர் இம்ரான்கானிடம் கோரிக்கை விடுத்தார்.

ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்த இம்ரான்கான் பின்னர் பட்டத்து இளவரசரின் அன்புக் கட்டளையை ஏற்றுக்கொண்டார். அதன்படி இம்ரான் மற்றும் அவருடன் சென்றிருந்த உயர்மட்ட அதிகாரிகள் அனைவரும் தனி விமானத்தில் அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றனர்.


Recommended For You

About the Author: Editor