தென்னாபிரிக்காவுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்கா அணி, மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது.

இதே தொடரின் இறுதி தொடரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் மீண்டும் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர், 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில், ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஓர் அங்கமாக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்து நடைபெறவுள்ளது.

இதற்கான இந்திய அணி விபரம், இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா, உபாதைக்குள்ளாகியுள்ளதால், அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில், சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

உமேஷ் யாதவ், இறுதியாக 2018ஆம் ஆண்டு பெர்த்தில் நடைபெற்ற அவுஸ்ரேலியா அணிக்கெதிரான போட்டியில் விளையாடியிருந்தார்.
இதேபோல, உள்ளூர் மற்றும் இந்திய ஏ அணிகளுக்கிடையிலான போட்டியில், சிறப்பாக துடுப்பெடுத்தாடிய இளம் வீரர் சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதேபோல தமிழக முன்னணி சகலதுறை வீரர் ரவிசந்திரன் அஸ்வினுக்கும் அணியில், வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும், ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கே.எல் ராகுல் அணியிலிருந்து நீக்கப்பட்டு, ரோஹித் சர்மாவுக்கு அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். இதுதவிர இறுதியாக நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய ஹனுமா விஹாரிக்கு அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணியின் முழுமையான விபரம் வருமாறு ,

விராட் கோஹ்லி தலைமையில், மாயங் அகர்வால், ரோஹித் சர்மா, செடீஸ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப்பந்த், ரித்திமான சஹா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், மொஹமட் ஷமி, உமேஷ் யாதவ், இசாந் சர்மா, சுப்மான் கில் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இரு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி விஷாக்கப்பட்டினத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி, ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி புனேவிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி ராஞ்சியிலும் நடைபெறவுள்ளது


Recommended For You

About the Author: ஈழவன்