பாகிஸ்தானில் நிலநடுக்கம் – 22 பேர் உயிரிழப்பு

கிழக்கு பாகிஸ்தானில் உணரப்பட்ட 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக சிறார்கள் உட்பட 22 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் 300 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

அதேவேளை, குறித்த நில நடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலும் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் நிர்வாகக் காஷ்மீரில் உள்ள மிர்பூருக்கு அருகே 10 கி.மீ. ஆழத்தில் நிலைகொண்டிருந்ததாகவும், மிர்பூர் பிராந்தியம் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் முதன்மை வானிலை அலுவலர் முகம்மது ஹனீஃப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ஜீலம், மங்களா, டினா, லாகூர், காரியன், குஜ்ஜர் கான், குஜ்ராட், ஹஃபிசாபாத், லாலா மூசா மற்றும் மிர்பூர், முஜாஃபராபாத், காஷ்மீரின் பல இடங்கள், இஸ்லாமாபாத் உள்ளிட்ட இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலநடுக்கத்தால் சில வீதிகளில் பாரிய பிளவுகள் ஏற்பட்டுள்ளதுடன், பாலங்களும் சேதமடைந்துள்ளன.

நேற்று மாலை 4 மணியளவில் உணரப்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியாவின் பஞ்சாப் மற்றும் சண்டிகரிலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலை 4.43 மணி அளவில் 3.4 அளவில் நிலநடுக்கத்துக்குப் பிந்திய அதிர்வு நிகழ்ந்ததாகவும், அடுத்த 24 மணிநேரத்திற்குள் மிதமான பல அதிர்வுகள் ஏற்படலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் முகம்மது ஹனீஃப் தமது அறிக்கையில் கூறியிருந்தார்.

பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரில் – ஜாட்லான் என்ற பகுதியில் இரண்டு பாலங்கள் சேதமடைந்துள்ளன. அதே ஊரில் கட்டட இடிபாடுகளில் குறைந்தது மூன்று பேர் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிந்து நதியின் துணை நதிகளில் ஒன்றான ஜீலம் நதிக் கால்வாயில் ஏற்பட்ட பிளவு காரணமாக அருகில் உள்ள கிராமங்களில் வெள்ளநீர் புகுந்துள்ளது.

மீட்புப் பணியாளர்கள் களத்தில் இறங்கியுள்ள நிலையில், சில இடங்களில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கடந்த 2005 ஆம் ஆண்டளவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் பல்லாயிரக் கணக்கானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 


Recommended For You

About the Author: ஈழவன்