ஞானசாரர் வழக்கில் இடைபுகு மனுதாரர்களாக தமிழ் சட்டத்தரணிகள்.

நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்கு சிறைத் தண்டனை அனுபவித்து வந்த ஞானசார தேரருக்கு ஜனாதிபதி வழங்கிய பொதுமன்னிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் இடைபுகு மனுதாரராக இணைவதற்கு தமிழ் சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளனர்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு ஹோமகம நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, நீதிமன்றத்துக்குள் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில், ஞானசார தேரருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையை வழங்கியது. 2018ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் வெலிக்கடை சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார்.

சுமார் 9 மாத சிறைத் தண்டனை நிறைவேறிய நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொது மன்னிப்பில் கடந்த மே 24ஆம் திகதி அவர் விடுதலை செய்யப்பட்டார். அவரது விடுதலைக்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் அடாத்தாக குருகந்த புராண ரஜமகா பௌத்த விகாரை எனும் பெயரில் விகாரை அமைத்து அங்கு தங்கியிருந்த சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவான மேதாலங்கார கீர்த்தி புற்று நோய் காரணமாக காலமாகிய நிலையில் அவரது உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.

முல்லைத்தீவு நீதிமன்றை அவமதிக்கும் வகையில் கருத்தை வெளியிட்டிருந்த ஞானசார தேரர், நீதிமன்றின் கட்டளையை மீறி பௌத்த பிக்குவின் உடலை நீராவியடி பிள்ளையார் ஆலய சூழலில் தகனம் செய்யக் காரணமாக இருந்தார்.

இதனையடுத்தே உயர் நீதிமன்றில் ஞானசார தேரருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் மனுவில் இடைபுகு மனுதாரராக இணைந்து அவரது நடவடிக்கை தொடர்பில் மன்றுக்கு எடுத்துரைப்பது என வடக்கு மாகாண சட்டத்தரணிகள் இன்று தீர்மானம் எடுத்தனர்


Recommended For You

About the Author: ஈழவன்