மழையுடனான காலநிலையால் ஒருவர் உயிரிழப்பு

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக இதுவரையில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 11 மாவட்டங்களில் 1475 குடும்பங்களைச் சேர்ந்த 5539 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இறுதியாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது.

அனர்த்தம் காரணமாக 12 வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, 152 வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் அம்பாறையில் சில தினங்களுக்கு முன்னர் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மூவர் இதுவரையில் வீடு திரும்பவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

கடும் மழை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்றும் நாளையும் மூடப்படவுள்ளதாக தென் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக கிங் நில்வலா மற்றும் களு ஆகிய கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் தாழ்நிலப் பிரதேசங்களில் வசிக்கின்ற மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நில்வலா கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக மாத்தறை, திஹகொட, மாலிம்பட, கம்புருப்பிட்டிய, அத்துரலிய, அக்குரஸ்ஸ பிட்டபெத்தர வெலிகம ஆகிய பகுதிகளை சேர்ந்த தாழ்நிலங்களில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர களுகங்கையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதன் காரணமாக நாகொட, அகலவத்த, புளத்சிங்கள, ஹொரணை மற்றும் இங்கிரிய ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை நிலவும் மழையுடனான வானிலை காரணமாக இரத்தினபுரி மாத்தறை மாவட்டங்களுக்கு மேலதிகமாக களுத்துறை, கேகாலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் இன்றும் நாளையும் 200 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வடமேல், வடக்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ.க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

 


Recommended For You

About the Author: ஈழவன்