கென்யாவில் இடம்பெற்ற காளை போட்டி!!

கென்யாவின் மேற்கு பிராந்தியத்தில் உள்ள லுஹ்யா சமூகத்தைச் சேர்ந்த மக்களிடையே ‘காளைச் சமர் விளையாட்டு’ என்பது பாரம்பரியமாக இடம்பெற்று வருகின்றது.

இறுதிச்சடங்குகள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் வகையிலும் இங்கு காளை விளையாட்டு நடத்தப்படுவது வழக்கம். இது மிகவும் போட்டி மிக்க தொழிலாக இருப்பது மட்டுமின்றி, சில நேரங்களில் இலாபகரமானதாகவும் அமைகின்றது.

‘டன்கன் மூரே’ என்ற ஔிப்படக் கலைஞர் கென்யாவின் மேற்குப் பகுதியிலுள்ள ‘ககமேக’ எனும் கிராமத்திற்கு சென்று, அங்குள்ள மக்கள் காளை விளையாட்டு போட்டிகளை பிரதான மற்றும் சட்டப்பூர்வ விளையாட்டாக மாற்றுவதற்கு எவ்வாறான தொடர் போட்டிகளை முன்னெடுத்து வருகின்றனர் என்பதை பதிவு செய்துள்ளார்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டைப் போலன்றி சாதாரண விவசாய நிலங்களிலேயே இங்கு காளைகள் சீறிப் பாய்கின்றன.

ஒரு சனிக்கிழமை நாளன்று காலை வேளையில், காளை மாட்டு போட்டியாளர் தனது பரிவாரங்களுடன், அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த மற்றொருவரின் காளையுடன் நடைபெறவுள்ள போட்டிக்கு காளையை அழைத்துச் செல்வார்.

காளைகளை போட்டிக் களத்திற்கு அழைத்துச் செல்லும்போது, வழிநெடுகிலும் நின்றுக் கொண்டிருக்கும் ‘இசுக்குட்டி’ எனும் இசைக்கலைஞர்கள் பாரம்பரிய இசையை இசைத்து மக்களை கவர்ந்திழுகின்றனர்.

சண்டைக்கு முன்னதாக போட்டி ஏற்பாட்டு குழுவினர் காளைகளை பரிசோதனைக்கு உட்படுத்துகின்றனர். தங்களுக்கு சொந்தமான அல்லது விருப்பமான காளையை நிகழ்வை நேரில் பார்ப்பவர்கள் கூக்குரலிட்டு உற்சாகப்படுத்துகின்றனர்.

காளைச் சண்டையை பொறுத்தவரையில் அதைப் பார்க்க வருபவர்களே பல சமயங்களில் தாக்குதலுக்கு உள்ளாகும் சூழ்நிலையும் ஏற்படுகின்றது.

எவ்வாறாயினும் இந்த போட்டிகளுக்கு, கென்யாவை சேர்ந்த விலங்கு உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இது தங்களது பொருளாதார செயல்முறையின் முக்கிய கூறு என்றும் காலங்காலமாக தொடர்ந்து வரும் பாரம்பரியம் என்றும் போட்டியின் அமைப்பாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

காளைகளுக்கு இடையேயான போட்டி ஒருபுறம் மிருக்க, அதன் உரிமையாளர்களுக்கு இடையேயும் சூதாட்டத்தை மையப்படுத்தி அவ்வப்போது மோதல்கள் ஏற்படுகின்றன.

குறிப்பாக உலகின் மற்ற சில பகுதிகளைப் போன்று கென்யாவில் தோல்வியடைந்த காளை விற்கப்படுவதோ, உணவுக்காக கொல்லப்படுவதோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor