திருமண சடங்கில் குண்டு வீச்சு – 40 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் ஹெல்மன்ட் மாகாணத்தில் அரச படைகள் உள்ளிட்ட கூட்டுப்படையினர் பயங்கரவாதிகளை குறிவைத்து மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் திருமண வீட்டில் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 40 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

குறித்த தாக்குதலில் மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்ததாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வௌியிட்டிருந்தன

ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் அண்மையில் மேலோங்கியுள்ள நிலையில், தற்கொலைத் தாக்குதல்களும், குண்டுத் தாக்குதல்களும் இடம்பெற்று வருகின்றன.

அதேவேளை, தலிபான்கள் சில பகுதிகளை கைப்பற்றி அங்கு வரிவிதிப்பு உள்ளிட்ட நிர்வாகங்களை தங்கள் வசப்படுத்தி போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பயங்கரவாதிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்குமாறு ராணுவம் மற்றும் பொலிஸாரை உள்ளடக்கிய பயங்கரவாத ஒழிப்பு கூட்டுப்படைகளுக்கு ஜனாதிபதி அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.

இந்த படைகளுக்கு ஆதரவாக அரசாங்கத்துக்கு நம்பகரமான தன்னார்வலர்களைக் கொண்ட படையும் இணைந்துள்ளது.

இந்தநிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தெற்கு ஹெல்மன்ட் மாகாணத்தில் பயங்கரவாதிகளை குறிவைத்து நடந்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தெற்கு ஹெல்மன்ட் மாகாணத்துக்குட்பட்ட முசா காலா மாவட்டத்தில் தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக சிறப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த மாவட்டத்துக்கு ராணுவ வீரர்கள் சென்றதுடன், அவர்களுக்கு பாதுகாப்பாக அமெரிக்க போர் விமானங்களும் சென்று தாக்குதல் நடத்தியுள்ளன.


Recommended For You

About the Author: ஈழவன்