காவியுடையில் வெறியாட்டம் போடாதீர்கள்

நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி நீராவியடியில் தேரர்கள் நடந்துகொண்ட விதம் அருவருக்கத்தக்கது என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இன, மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் காவியுடையில் எவரும் வெறியாட்டம் போடக்கூடாது என்றும் நீதிமன்றத்தை அவமதித்து சிறைக்குள் இருந்தவர்கள் மீண்டும் வெளியில் வந்து சண்டித்தனம் காட்டுவது நாட்டுக்கே அவமானமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்துக்குள் பெளத்த மதகுரு கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடல் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினரால் நேற்று தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நாடு அனைத்து இனத்தவர்களுக்கும் சகல மதத்தவர்களுக்கும் சொந்தமான நாடு என்றும் இதில் நான் பெரிது, நீ சிறிது என்ற பாகுபாடு வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் நாட்டின் நீதித்துறைக்கு அனைவரும் தலைவணங்கியே ஆக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி நீராவியடியில் தேரர்கள் நடந்துகொண்ட விதம் அருவருக்கத்தக்கது. இது இறந்த விகாராதிபதியை அவமதிக்கும் செயலாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்