வடக்கு , கிழக்கில் சட்டத்தை மதிக்கவில்லை

முல்லைத்தீவு விவகாரத்தை இனரீதியாக பார்க்க வேண்டாமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பெளத்த மதகுருவின் பூதவுடலை தகனம் செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

அத்தோடு, தேரரின் உடலை ஆலயத்திற்கு அண்மையிலுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவினை மீறி ஆலய வளாகத்தில் கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடல்  தகனம் செய்யப்பட்டுள்ளது.

உடல் தகனம் செய்யப்படுவதற்கு  முன்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாம் மிகவும் கவலையடைகிறோம். ஒரு நாட்டில், ஒரு சட்டத்தின் கீழ்தான் நாம் அனைவரும் வாழ்கின்றோம்.

ஆனால், இன்று நீதிமன்றில் பிள்ளையார் ஆலயத்தில் சார்பாக முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகள், நாட்டின் சட்டத்திட்டங்கள் வடக்கு மற்றும் கிழக்குக்கு செல்லுபடியாகாது எனும் தொணியில்தான் கருத்து வெளியிட்டிருந்தனர்.

இதன் ஊடாக எமக்கு சில விடயங்கள் தெளிவாக விளங்குகிறது. இந்த சட்டத்தரணிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தேவைக்கு இணங்கவே செயற்படுகிறார்கள்.

வடக்கில் தமிழ்- சிங்களம் என்று அனைவரும் உயிரிழந்தார்கள். அப்போது இவர்களின் உடல்கள் அனைத்து இடங்களிலும்தான் புதைக்கப்பட்டன. அப்போது யாரும் எதிர்ப்பினை வெளியிடவில்லை.

கொழும்பில், அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடன்தான் வாழ்ந்து வருகிறார்கள். அங்குள்ளவர்கள் இனங்களை வைத்து மனிதர்களுடன் பழகுவதில்லை.

ஆனால், இங்கு இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளமையையிட்டு நாம் மிகவும் கவலையடைகிறோம்.

எனவே, நீதிமன்றத் தீர்ப்பு எவ்வாறாக வந்தாலும் நான் ஏற்கனவே திட்டமிட்டிருந்த இடத்தில் தேரரின் உடலை தகனம் செய்வோம்” என மேலும் தெரிவித்தார்.


Recommended For You

About the Author: ஈழவன்