சட்டமும் நீதியும் பெரும்பான்மையினருக்கு மட்டும்தானா…? கொந்தளிக்கும் முன்னாள் எம்.பி.

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் குருகந்த புராண ரஜமகா பௌத்த பிக்குவான மேதாலங்கார கீர்த்தியின் உடல் தகனம் செய்யப்பட்டதில் நீதிமன்ற உத்தரவு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.

இது இந் நாட்டின் சட்டத்தின் மீது தமிழ் மக்களுக்கு நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலியே பயிரை மேய்வது போன்று இன்றை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

இப்படிக் கருத்துத் தெரிவித்திருக்கிறார் யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார்.

செம்மலைப் பிள்ளையார் ஆலய வளாகத்துக்குள் நீதிமன்ற உத்தரவை மீறி பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டதைத் கண்டித்து அவர் விடுத்த அறிக்கையிலேயே மேற்படி கருத்தைத் தெரிவித்தார்.

மேலும், நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்த வேண்டியவர்கள் பொலிஸார். ஆனால் இன்று அவர்களே நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கு உடந்தையாக நிற்பதை அவதானித்துள்ளோம். பொலிஸாரின் பாதுகாப்புடன் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டு பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

யுத்தத்திற்கு பின்னரான சூழ்நிலையில் இனங்களுக்கு இடையேயான நல்லிணக்க முயற்சிகள் முழுமையாக கட்டியெழுப்படாத சூழ்நிலையில் இது போன்ற செயற்பாடுகள் நாட்டை ஆரோக்கியமான நிலைக்கு கொண்டு செல்லாது என்பது கவலைக்குரிய விடயம்.

ஏழைத் தோட்டத் தொழிலாளியின் உடலை அடக்கம் செய்த விவகாரத்தில் பிரதி அமைச்சர் பாலித தேவபெரும நீதிமன்ற உத்தரவை மீறிவிட்டார் என அவரை சிறைக்கு அனுப்ப முடியும் என்றால்… அதே நீதியும் சட்டமும் இன்றைய சம்பவத்தில் நீதிமன்ற உத்தரவை மீறியவர்களுக்கும், அதற்கு உடந்தையாக நின்ற பொலிஸாருக்கும் என்ன செய்யப் போகின்றது? இலங்கையின் சட்டமும் நீதியும் பெரும்பான்மை இனத்திற்கும், மதத்திற்கு மட்டும்தானா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor