காணிகளை மக்களிடம் வழங்க முடியாது!

மன்னார், சிலாவத்துறையில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை தேசிய பாதுகாப்பு காரணங்களால் அவர்களிடம் மீண்டும் வழங்க முடியாது என படைத்தரப்பு மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணையின்போது தெரிவித்துள்ளது.

மன்னார், சிலாவத்துறை காணி பிரச்சினை வவுனியாவிலுள்ள மனித உரிமை ஆணைக்குழு முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே இராணுவத் தரப்பு மேற்படி கருத்தை வெளியிட்டது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மன்னார் முசலி பிரதேச சபைக்குட்பட்ட சிலாவத்துறை பகுதியை சேர்ந்த மக்கள் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து புத்தளம், அனுராதபுரம், குருநாகல், கற்பிட்டி போன்ற பிரதேசங்களில் வசித்து வந்தனர்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறித்த மக்கள் சிலாவத்துறை பகுதியில் மீள்குடியேற்றத்துக்கு என வருகை தந்த நிலையில் அவ் மக்களின் நிலங்களில் கடற்படையினர் பெரும் முகாம் ஒன்றை அமைத்திருந்தனர்.

தபாலகம், ஆரம்ப சுகாதார நிலையம், பாடசாலை, நூலகம், பள்ளிவாசல் உட்பட மக்களின் காணிகள் 28 ஏக்கர் கடற்படை ஆக்கிரமித்திருந்த நிலையில் கடந்த வருடம் தங்கள் பூர்வீக நிலங்களை கடற்படையினர் விடுவிக்கக் கோரிக்கை விடுத்து சிலாவத்துறை கடற்கரை முகாமுக்கு முன்பாக சாத்வீக போராட்டம் ஒன்றை மக்கள் முன்னெடுத்திருந்தனர்.

அதன் ஒரு பகுதியாக கடந்த மாசி மாதம் 22 திகதி மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின்(MSEDO) உதவியுடன் மனித உரிமை ஆணைக்குழுவின் மன்னார் உப காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்று கையளிக்கப்பட்டது.

குறித்த முறைப்பாடு தொடர்பாக கவனம் செலுத்திய மனித உரிமை ஆணைக்குழு, இன்று திங்கட்கிழமை குறித்த காணி விடயம் தொடர்பாக விசாரணை நடத்தியது.

இதன்போது முசலி பிரதேச செயலாளார், சிலாவத்துறை கடற்படை பொறுப்பதிகாரி, வடமேல் கடற்படை கட்டளை தளபதி, மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பன பிரதிநிதிகளை அழைத்து வவுனியா மனித உரிமை ஆணைக்குழு காரியாலயத்தில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. அதன் அடிப்படையில் இன்றைய விசாரணையின் போது குறித்த காணியானது தேசிய பாதுகாப்பிற்கு அவசியமானது என்பதனால் காணியை சட்ட ரீதியாக கடற்படைக்கு உரித்தாக்குவதற்கான செற்பாடுகள் இடம் பெறுவதாகவும், குறித்த கடற்பகுதியூடாக போதை பொருட்கள் பாரிய அளவு கடத்தப்படுவதாகவும் எனவே குறித்த பகுதி காணி தேசியபாதுகாப்புக்கு அவசியம் என கடற்படையினரால் தெரிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் பாதிக்கப்பட மக்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக பிரதேச செயலகம் சார்பாக தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாகவும் மெசிடோ நிறுவனம் சார்பாகவும் முன்னிலையான சட்டதரணி வி. அர்ஜூன், குறித்த காணிகள் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த இடங்கள் என்பதன் அடிப்படையில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார்.

எனினும் கடற்படையினரால் குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.


Recommended For You

About the Author: Editor