அதிபர் நியமனத்தில் தமிழ் மொழியினர் புறக்கணிப்பு! தீர்க்கும் முயற்சியில் ஹக்கீம்

இலங்கை பாடாசலை அதிபர்கள் தரம் III இற்கான நியமனத்தில் தமிழ் மொழியினர் மிகமோசமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இதற்குத் தீர்வு காணும் முயற்சியாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் கல்வி அமைச்சின் செயலாளரை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப் பிரிவு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு:

அதிபர் சேவை நியமனத்தில் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பிரதிநிதிகள் இன்று அமைச்சர் ஹக்கீமை சந்தித்து தமக்கு தீர்வு தருமாறு கேட்டனர். இதன்போது நாடளாவிய ரீதியில் 1858 அதிபர்கள் நியமிக்கப்பட்டபோதும் இதில் 34 முஸ்லிம்கள், 133 தமிழர்கள் என 167 பேரே நியமனம் பெற்றனர். இதன் மூலம் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார்.

இந்த விடயம் குறித்து அமைச்சர் ஹக்கீமும் பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளும் கல்வி அமைச்சின் செயலாளரையும் உயர் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசினர்.

இதன்போது மொழி ரீதியாக தனியான பட்டியலிடப்பட்டு நியமனங்கள் இடம்பெற வேண்டும் என்றும், பரீட்சைப் புள்ளிகள் வெளியிடப்படாத நிலையில் நியமனப் பட்டியலை தயாரிக்கப்பட்டமை பல தரப்பினரிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், பரீட்சைப் புள்ளிகளின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு நடத்தாமல் பிராமணக் குறிப்பின்படி செயற்படவும் ஆலோசனை வழங்கப்பட்டது. சந்திப்பின் இறுதியில் பாதிக்கப்பட்ட தமிழ் மொழியினருக்கு உரிய தீர்வு வழங்குவதாக அமைச்சின் செயலாளர்கள் உறுதியளித்தனர்.


Recommended For You

About the Author: Editor