பெளத்த பிக்குவின் விவகாரம் :கண்டத்தை தெரிவித்த ஜ.ம.மு செயலாளர்!

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் கேணியில் காலமான பௌத்த பிக்குவின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டமைக்கு ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளர் ஜனகன் விநாயகமூர்த்தி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்.

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் கேணியில் காலமான பௌத்த மதகுருவின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் இந்த இடத்தில் தகனம் செய்ய தடை விதித்ததுடன், அதற்கான வேறு ஒரு இடத்தை ஒதுக்கி கொடுத்து தீர்ப்பு வழங்கியது. இருப்பினும் அந்த தீர்ப்பை அவமதித்து அதே இடத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவதத்தில் இரண்டு முக்கிய விடயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். முதலாவது சட்டத்தை மீறியுள்ளார்கள்.

நீதிமன்றத்தை அவமதித்துள்ளார்கள். நீதிமன்ற தீர்ப்பை செயற்படுத்த வேண்டிய காவல்துறையினர் நடைபெற்ற சம்பவத்துக்கு ஆதரவாக இருந்துள்ளனர். அல்லது கண்டும் காணாமலும் இருந்துள்ளனர். இவை எதிர்காலத்தில் இன்னும் மோசமான சம்பவங்கள் நடைபெறுவதற்கு தூண்டு கோலாக அமையப்போகிறது.

இவ்வாறன சம்பவங்கள் தொடரும் படசத்தில் தமிழர்கள் பொறுமையாக இருப்பார்களா? மீண்டும் அவர்கள் கடந்த கால சம்பவங்களை நோக்கி தள்ளப்படுவார்கள்.

இது ஆரோக்கியமானதல்ல. எனவே இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு.

நீதிமன்றமும், நீதித்துறையும் வழங்கும் தீர்ப்புகளை இனி மக்கள் எந்த வகையில் நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்வது?

இந்த சம்பவத்தின் மூலம் இரண்டாவது விடயமாக இந்து மக்களின் புனிதம் பாதிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு பாரதூரமான விடயம். இவ்வாறான பெரும்பான்மையினத்தவரின் அடாவடியான செயற்பாடுகள் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்த விடயத்தை அரசாங்கம் சாதரண விடயமாக பார்க்குமானால் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகள் உருவாகும் வாய்ப்புகளுள்ளன.

சட்டத்தை காப்பாற்றவேண்டியவர்கள் இவ்வாறன சம்பவங்களுக்கு துணை போயுள்ளார்கள். இது மிகப்பெரியளவிலான கண்டனத்துக்கான விடயம்.

நடைபெற்ற சம்பவத்துக்கு எனது கடுமையான கண்டனங்களை தெரிவிக்கிறேன். இந்த சம்பவம் தமிழர்கள் மத்தியில், குறிப்பாக வன்னியில் வாழும் தமிழ் மக்கள் மீது பாரிய அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கள தலைவர்கள் மீது அவ நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எனவே இவ்வாறன சம்பவங்களை இனி வன்னி மண்ணிலும், தமிழர் பகுதிகளிலும் நடைபெற அனுமதிக்க முடியாது.

உரிய தரப்பினரும், அரசாங்கமும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து எம் மக்களின் வாழ்க்கை வழமைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், என குறிப்பிடப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor