
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், குழந்தைகள் மீதான பாலியல் வழக்குகள் அதிகரிக்கும் நிலையில், குழந்தைகளுக்கு தேவையான விழிப்புணர்வு முகாம்களை, குழந்தைகள் நல அமைப்புகள் நடத்துவது இல்லை என, புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் சமீப காலமாகவே, சிறுவர், சிறுமியர் மீது பாலியல் பலாத்கார வழக்குகள் அதிகமாகி வருகிறது. இதுபோன்ற கொடுமையான செயல்களில் இருந்து, சிறுவர்களை காக்க, ‘போக்சோ’ எனும் சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
ஜாமினில் வெளிவர முடியாமல், அதிகபட்ச தண்டனை வழங்கும் வகையில், இச்சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இருப்பினும், 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் மீதான பாலியல் கொடுமைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களில், சில நாட்களாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், அதிக எண்ணிக்கையில் இந்த சம்பவங்கள் நடைபெற்று வருவது, பலருக்கும் கவலை அளிக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதிவு செய்யப்படும் இதுபோன்ற வழக்குகள், முறையாக விசாரணை நடத்தப்படுகிறதா, குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றனரா என்பது வேறு; ஆனால், சிறுவர்களுக்கு, விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை என, சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.