நீதிமன்ற உத்தரவை மதிக்காத பிக்குகள்

நீதிமன்ற உத்தரவினை பொருட்படுத்தாமல் கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் புதைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பௌத்த பிக்குவின் உடலை ஆலய வளாகத்தில் புதைப்பதற்குரிய நடவடிக்கைகளை ஞானசாரர் தலைமையிலான பிக்குகள் ஆரம்பித்துள்ளனர்.

இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றமும், மோதல் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு எழுத்துமூலம் வழங்கப்படுவதற்கு முன்னர் பௌத்த பிக்குவின் உடலை இவ்வாறு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் புதைக்க, ஞானசார தேரர் தரப்பு நடவடிக்கையெடுத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை ஆலயத்திற்கு அண்மையிலுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த மதகுரு உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் மஹரகம வைத்தியசாலையில் உயிரிழந்திருந்தார்.

உயிரிழந்த பௌத்த மதகுருவின் பூதவுடலை ஆலய வளாத்தில் தகனம் செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்து பிரதேச மக்கள் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் இந்த விவகாரம் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சம்பவம் குறித்து ஆராய்ந்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஆலய வளாகத்தில் மதகுருவின் உடலை தகனம் செய்ய இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார்.

பிக்குவின் உடலை புதைப்பது தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கு மீதான விசாரணை இன்றைய தினம் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

இரு தரப்பும் தமது வாதங்களை முன்வைத்தனர். இதையடுத்து, ஆலய வளாகத்திற்கு வெளியில் பிக்குவின் உடலை புதைப்பதற்கு ஆட்சேபணையுள்ளதா என பிள்ளையார் ஆலய நிர்வாகத்திடம் நீதிவான் கேள்வியெழுப்பினார். இது தொடர்பாக ஆலோசித்து பதிலளிக்குமாறு அவகாசம் வழங்கினார்.

சிறிய இடைவேளையின் பின்னர் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, ஆலய வளாகத்தில், சூழலில் பிக்குவின் உடலை புதைப்பதை தாம் எதிர்ப்பதாக ஆலய நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

உடலை அடக்கம் செய்வற்கு உரிய இடங்களிலேயே அடக்கம் செய்வதே பொதுவிதியென்பதையும் சுட்டிக்காட்டி, உடலை அடக்கம் செய்ய சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் அடக்கம் செய்யும்படி கோரினர்.

நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் ஆலயத்திற்கு அப்பால் உள்ள இராணுவ முகாமிற்கு அண்மையலுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், அவருக்கு நினைவு தூபி அமைக்கவும் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்