வெளியே தள்ள முதல் வெளியேறுங்கள் – டோனிக்கு கவாஸ்கர் அறிவுரை

தேசிய அணியில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் முன்னாள் தலைவர் எம்.எஸ்.டோனி, அணியில் இருந்து வெளியே தள்ளுவதற்கு முன்பு ஓய்வு பெற வேண்டும் என்று முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ணத் தொடருக்குப் பின்னர் இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு எதிரான தொடரில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ள டோனியை, எதிர்வரும் பங்களாதேஷிற்கு எதிரான தொடரில் சேர்க்க வேண்டுமா? என்கின்ற விவாதம் சூடு பிடித்துள்ள நிலையில், பங்களாதேஷிற்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் டோனியை சேர்க்க வேண்டியதில்லை என கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

டோனியை ஒதுக்கி விட்டு அவருடைய இடத்துக்கு யாரை கொண்டு வர வேண்டும் என்பது குறித்து நாம் யோசிக்க வேண்டிய நேரம் இது. அடுத்த ஆண்டு ‘ருவென்டி 20’ உலகக்கிண்ண தொடர் நடைபெற இருப்பதால் நிச்சயமாக இளம் விக்கெட் காப்பாளர் ரிஷப் பந்துக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.

ஒருவேளை ரிஷப் பந்த் சரியாக விளையாடவில்லை என்றால் என்னுடைய அடுத்த தேர்வு சஞ்சு சாம்சன் தான். அவர் நல்ல விக்கெட் காப்பாளர் மட்டுமின்றி சிறந்த துடுப்பாட்ட வீரருமாவார்.

‘ருவென்டி 20’ உலகக் கிண்ணத் தொடருக்கு இளம் வீரர்களை தான் முன்னெடுத்து செல்ல வேண்டும். இந்திய கிரிக்கெட்டுக்கு டோனி மகத்தான பங்களிப்பை அளித்து இருக்கிறார். இருப்பினும் அவரை தாண்டி அடுத்த வீரரை அந்த இடத்துக்கு கொண்டு வரவேண்டிய நேரம் இதுவாகும்.

டோனியை வலுக்கட்டாயமாக வெளியே தள்ளுவதற்கு முன்பாக அவரே சென்று விடுவார் என்று நினைக்கிறேன். டெஸ்ட் போட்டியை சிறப்பாக தொடங்கி இருக்கும் ரிஷாப் பன்டினை மேலும் மெருகேற்ற வேண்டும். அவர் செய்யும் தவறுகளை திருத்தி கொண்டு விடுவார் எனவும் கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்


Recommended For You

About the Author: ஈழவன்