முல்லை நீராவியடியின் சர்ச்சைக்குரிய பௌத்த பிக்கு காலமானார்

முல்லைத்தீவு, பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த மதகுரு புற்றுநோய் காரணமாக வைத்தியசாலையில் காலமாகியுள்ளார்.

நீண்டகாலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் கொழும்பு மஹரகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) காலமானார்.

கொழும்பு மேதாலங்கார கீர்த்தி என்ற பௌத்த பிக்கு மிக நீண்ட காலமாக தமிழ் மக்களுக்கு சொந்தமான பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து தொல்பொருள் திணைக்களத்தின் ஆதரவுடன் குருகந்த ரஜமஹா விகாரை என்னும் பெயரில் விகாரை அமைத்து அங்கு தங்கியிருந்தார்.

அத்துடன் பிள்ளையார் ஆலயத்துக்கு வழிபாட்டுக்குச் செல்லும் தமிழ் மக்களுடனும் பிரச்சினைகளில் ஈடுபட்டு வந்தார்.

இதன் காரணமாக முல்லைத்தீவு பொலிஸாரால் பௌத்த பிக்கு மற்றும் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத் தரப்பினருக்கு எதிராக சமாதான சீர்குலைவு ஏற்படுத்தப்படுவதாக தெரிவித்து முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் கடந்த மே மாதம் 6ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இதன்படி பிள்ளையார் ஆலயத் தரப்புக்கு பிக்குவால் இடையூறு ஏற்படுத்தப்படக்கூடாது எனவும் இரு தரப்பும் சமாதான முறையில் தமது வழிபாடுகளை சுதந்திரமாக மேற்கொள்ளலாம் என்றும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் இந்த தீர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து கடந்த மாதம் வவுனியா மேல் நீதிமன்றில் பௌத்த பிக்கு சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் பௌத்த பிக்கு மரணமடைந்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்