முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்!

மட்டக்களப்பில் வாகனங்களில் எழுதப்பட்டுள்ள குர்ஆன் வசனங்களுக்கு அகற்றுமாறு பொலிஸார் அச்சறுத்துவதாக முஸ்லிம் மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

பொலிஸாரின் இத்தகைய செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்துமாறு, பிரதி பொலிஸ் மா அதிபரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களது வாகனங்களில் காணப்படும் அகுர்ஆன் வசனங்களை உடன் அகற்றுமாறு போக்குவரத்து பொலிஸார் எச்சரித்ததுடன் கால அவகாசமும் வழங்கியுள்ளனர்.

குர்ஆன் வசனங்களை அகற்றுவது தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு அறிவித்தல்களையும் இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் பொலிஸாரின் செயற்பாடு அதிருப்தி அளிப்பதாக அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான மதங்கள் சார்ந்த போதனைகள், அம்மதங்கள் சார்ந்த முக்கிய கருத்துக்கள் பிற மொழிகளிலேயே காணப்படுகின்றன.

பாளி , சமஸ்கிருத மொழிகளில் உள்ளவற்றை உதாரணமாக குறிப்பிடலாம். அதே போன்றே இஸ்லாமிய மத சார்ந்த விடயங்கள் அரபு மொழியில் காணப்படுகின்றன.

அவ்வாறான ஒரு புனிதமான குர்ஆன் வாசகத்தையே சில முஸ்லிம்கள் தமது வாகனங்களில் பொறித்துள்ளனர். இவைகள் வன்முறைகளை தூண்டுவதாகவோ, நிந்தனை செய்வதாகவோ இல்லை, சாந்தி சமாதானம், அன்பு, இறையச்சம் என்பவற்றை போதிப்பதாகவே இவை உள்ளன.

இதனை அகற்ற கோருவதும், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முயல்வதும் ஒரு பொருத்தமற்ற விடயமாகவே நான் கருதுகிறேன் என அலி ஸாஹிர் மௌலானா மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor