ஐ.தே.க வின் முடிவில்லை.

ஜனாதிபதி வேட்பாளரை இறுதி செய்யும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற மற்றும் செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அல்லது புதன்கிழமை இந்த கூட்டங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்போது ஜனாதிபதி வேட்பாளரை இறுதி செய்தல் மற்றும் புதிய தேர்தல் கூட்டணி உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து பேசப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த அறிவிப்பு எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.

இதன்காரணமாக ஐக்கிய தேசிய கட்சிக்குள் குழப்ப நிலை காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குமாறு அமைச்சர் சஜித் பிரேமதாஸ மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் எழுத்து மூலமாக கட்சியின் தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோன்று கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த முக்கிய அறிவிப்பு எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னர் வெளியிடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும், நாடு திரும்புமாறு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, பிரதமர் ரணில் தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் நேற்று கூடி ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தனர்.

எனினும் இதன்போது எவ்வித உடன்பாடுகளும் எட்டவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.


Recommended For You

About the Author: ஈழவன்