மீண்டும் சிக்கும் நித்தி!

நித்தியானந்தா மீது கொளத்தூர் காவல் நிலையத்தில் சிலை கடத்தல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த சாமியார் நித்தியானந்தா. கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வருகிறார். நித்தியானந்தாவின் சமீபத்திய பேச்சுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நித்தியானந்தா பேசும் வீடியோ ஒன்று வெளியானது. அதில், மேட்டூர் அணையில் நீருக்கு அடியில் உள்ள கோயிலை அவர் தான் தனது முன் ஜென்மங்களில் கட்டியதாகவும், அந்த கோயிலின் மூல லிங்கம் தற்போது தன்னிடம் தான் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இதுவரை இவரது பேச்சு நகைச்சுவையை ஏற்படுத்திய நிலையில், மூலவர் சிலை தன்னிடம் இருப்பதாக நித்தி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மேட்டூரில் இருந்து சிலை அவரிடம் எப்படிச் சென்றது? அந்த லிங்க சிலை அவரிடம் இருந்து மீட்கப்படுமா என்று நெட்டிசன்கள் கேள்விகளை அடுக்கி வருகின்றனர்.

இந்தநிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் பாலவாடியில் உள்ள ஜலகண்டேசுவரர் ஆலயத்திற்குச் சொந்தமான மூலவர் லிங்கத்தை நித்தியானந்தா திருடிச் சென்றதாகவும் அதனை மீட்டுத்தரும்படியும் பாலவாடியைச் சேர்ந்த வேலுசாமி, சக்திவேல் ஆகியோர் இன்று (செப்டம்பர் 20) கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor