உலக பாக்சிங் பைனலில் முதல் இந்தியர்!

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் ஆடவர் பிரிவு இறுதிப் போட்டிக்குள் நுழைந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் ஹரியானாவைச் சேர்ந்த அமித் பங்கல்.

ஹரியானாவைச் சேர்ந்த 23 வயதான அமித் பங்கல் 2017ஆம் ஆண்டில் நடந்த தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று ஆச்சரியப்படுத்தியவர்.
அதன் பின்னர் அதே ஆண்டில், ஆசிய பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 49 கிலோ உடல் எடைப்பிரிவில் வெண்கலம் வென்று பரவலாக கவன ஈர்ப்பு பெற்றார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற உலக குத்துச்சண்டை போட்டியில், காலிறுதி வரை முன்னேறி சாதனை புரிந்தார்.
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் சாம்பியன் ஆனார் பங்கல். இதனால், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அமித் பங்கலுக்கு இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் பரிந்துரையின் பேரில் அர்ஜுனா விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
இந்நிலையில், ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 52 கிலோ பிரிவில் தேர்வு செய்யப்பட்டார் அமித் பங்கல். இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், கஜகஸ்தான் வீரர் சாகென் பிபோசினோவுடன் மோதினார் பங்கல். இப்போட்டியில், 3-2 என்று வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் அமித் பங்கல்.
இதுவரை உலகக் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியா வெண்கலம் மட்டுமே வென்றுள்ள நிலையில், இப்போட்டியின் மூலம், உலகக் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்திய வீரராக சாதனை படைத்துள்ளார் அமித் பங்கல்.
நாளை(செப்டம்பர் 21) நடக்கவிருக்கும் இறுதிப் போட்டியில், அமித் பங்கல் உஸ்பெகிஸ்தான் வீரர் ஷாகோபிதின் சோய்ரவ் என்பவரை எதிர்கொள்கிறார்.
ஷாகோபிதின் சோய்ரவ் 2016ஆம் ஆண்டு, ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், நாளை நடக்கவுள்ள இறுதிப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது எனலாம்

Recommended For You

About the Author: Editor