பிரித்தானியாவில் அதிகரித்துள்ள கொள்ளைகள்! அவதானம்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் திருட்டுக்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன என்று ஆராய்ச்சித் தரவுகளை மேற்கோள்காட்டி பிபிசி தெரிவித்துள்ளது.

வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளையும் விடவும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன.
பொலிஸாரின் ரோந்து நடவடிக்கைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் ஸ்மார்ட்போன்களின் பரவலான பயன்பாடு ஆகியனவே இந்த அதிகரிப்புக்கு காரணம் என்று இந்த புதிய அறிக்கை கூறுகின்றது.
கடந்த ஆண்டு சுமார் 269,000 இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டிருந்தனர் அல்லது தவறான பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து உள்துறை அலுவலகம் தெரிவிகையில்; பொலிஸ் ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்கு நிதியளிப்பதாகவும், பொலிஸார் தமது அதிகாரங்களைப் பயன்படுத்த உதவுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஒஸ்ற்ரேலியா உள்ளிட்ட நாடுகளில் நடக்கும் திருட்டுக்கள் குறித்து குற்றவியல் நீதி ஆலோசகர்களின் குழு ஆய்வு செய்ததன் அடிப்படையில் 2010 முதல் 2014 வரை, குற்றங்கள் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் குறைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது
இருப்பினும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் திருட்டுச் சம்பவங்கள் 33% உயர்ந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டதுடன் திருட்டே வன்முறைக் குற்றங்களுக்கான ஆரம்பப் புள்ளியாக உள்ளது என்றும் கூறியுள்ளனர்.
கிரெஸ்ட் அட்வைசரியின் நிர்வாக இயக்குனர் ஹார்வி ரெட்கிரேவ் தெரிவிக்கும்போது; இது மிகவும் கடுமையான வன்முறைக்கு ஒரு நுழைவாயில் குற்றமாக உள்ளது. ஏனென்றால் கொள்ளைக் கும்பல்கள் இளைஞர்ளை கொள்ளையில் ஈடுபடத் தூண்டுவதுடன் அவர்களுக்கு பணமும் கொடுக்கின்றனர்.
ஸ்மார்ட்போன்களின் பயன்பாடும் இதன் அதிகரிப்பிற்கு காரணமாகின்றது. இங்கிலாந்தில் 10 பேரில் 8 பேர் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகிறார்கள். இது வேறு எந்த நாட்டையும் விட அதிகம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
2010 மற்றும் 2018 க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் 21,000 பொலிஸ் அதிகாரிகளின் பதவிகள் குறைக்கப்பட்ட பின்னர், பொலிஸார் மீதான அழுத்தங்களையும் இது மேற்கோளிட்டுக் காட்டியுள்ளது.

Recommended For You

About the Author: Editor